
புதுடெல்லி,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாவாசிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம் பதிலடியாக பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து, கடந்த 6-ந்தேதி இரவில் தாக்குதலை நடத்தியது.
இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்திற்கான சூழல் உருவானது. பாகிஸ்தான் தரப்பில் நடந்த தாக்குதல்களை இந்தியா தொடர்ந்து முறியடித்தது.
இந்நிலையில், இரு நாடுகளின் தரப்பிலும் சண்டையை உடனடியாக நிறுவத்துவது என இன்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இன்று மாலை 5 மணி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது என மத்திய அரசு அறிவித்தது. இந்த சூழலில், பாகிஸ்தான் மீண்டும் இந்தியா மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜஸ்தானின் பார்மர், ஜெய்சால்மர் நகரில் முழுமையாக மின் தடை அமல்படுத்தப்பட்டு உள்ளது. பஞ்சாபின் பதான்கோட், பலோட் பகுதியிலும் முழுமையான மின் தடை அமலாகி உள்ளது. தேவைப்பட்டால் அமிர்தசரஸ் நகரிலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அதிகாரி கூறியுள்ளார். பொதுமக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி இணை ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.
ஜம்மு, கத்துவா, உதம்பூர், பெரோஸ்பூர் நகரங்களிலும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. உதம்பூரில் பாகிஸ்தானின் டிரோன்கள் வழிமறித்து தாக்கி, அழிக்கப்பட்டன. போர் நிறுத்தம் என அறிவிக்கப்பட்ட சூழலில், இந்திய எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்து வருகிறது.
குஜராத்தின் உள்துறை மந்திரி ஹர்ஷ் சங்கவி வெளியிட்ட எக்ஸ் பதிவில், கட்ச் மாவட்டத்தில் பல்வேறு டிரோன்கள் தென்பட்டன. அதனால், முழு அளவில் மின் இணைப்பு துண்டிக்கப்படும். அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும். பயப்பட வேண்டாம் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.