
புதுடெல்லி,
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் சுற்றுலாப்பயணிகள் ஆவர். உலகையே உலுக்கிய இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதில் முக்கியமாக, பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விசாக்களை ரத்து செய்து, உடனடியாக அவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது. இதற்காக காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.
அந்தவகையில் சார்க் விசா வைத்திருந்தவர்களுக்கு கடந்த மாதம் 26-ந் தேதியும், மருத்துவ விசா வைத்திருந்தவர்கள் 29-ந் தேதியும், சுற்றுலா, புனித யாத்திரை உள்பட மேலும் 12 பிரிவினர் 27-ந் தேதிக்குள்ளேயும் வெளியேற உத்தரவிடப்பட்டது.இதைத்தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் வெளியேற தொடங்கினர். அதன்படி 786 பேர் இதுவரை நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
இந்தநிலையில், மத்திய ரிசர்வ் காவல்துறை வீரர் (CRPF) முனிர் கான் காஷ்மீரில் வசித்து வருகிறார். இவர் பாகிஸ்தானில் வசிக்கும் மினால் கான் என்பவரை கடந்த 2024 ம் ஆண்டில் ஆன்லைன் வழியே (நிக்கா) திருமணம் செய்து கொண்டார்.
பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறிட வேண்டும் என்று மத்திய அரசின் அதிரடி முடிவினால் மினால் கான் இப்போது காஷ்மீரை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு விட்டது. மீண்டும் என் கணவரை எப்போது சந்திக்க நேரிடும் என்று தெரிய வில்லை என்கிறார். மத்திய அரசு பாகிஸ்தானியர்களை வெளியேற வேண்டும் என்று அதிரடியான முடிவை எடுத்ததால் புற்றீசல்கள் போன்ற பல அதிர்ச்சி தரும் விஷயங்கள் வெளிவருகின்றன.