
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனிடையே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் வளாகத்திற்குள் நடந்து செல்லும்போது கால் சூடு பொறுக்கமுடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதற்காக தேவஸ்தான நிர்வாகத்தினர், பக்தர்கள் நடந்து செல்லும் இடங்களில் கம்பளங்களை விரித்தும், தண்ணீர் ஊற்றியும் சூட்டை தணிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர்.
இந்த நிலையில், இன்று மதியம் 12 மணியளவில் திருப்பதியில் திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையால் திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. வெயிலின் தாக்கம் குறைந்ததால் திருப்பதிக்கு வருகை தந்த பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.