பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்..? - கில்லெஸ்பி விளக்கம்

4 weeks ago 5

லாகூர்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடருக்காக பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஜேசன் கில்லெஸ்பி ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஆகிப் ஜாவித் நியமிக்கப்பட்டார். இவர் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான தலைமை பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? என்பது தொடர்பாக ஜேசன் கில்லெஸ்பி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஒட்டகத்தின் முதுகை முறித்த வைக்கோலின் கதையாக இது மாறிவிட்டது. நீங்கள் ஒரு தலைமை பயிற்சியாளராக உங்களுடைய முதலாளியுடன் தெளிவான தொடர்பையும் உரையாடலையும் பெறுவதற்கு முயற்சி செய்கிறீர்கள்.

ஆனால் உதவி பயிற்சியாளர் நீல்சனை என்னிடம் ஆலோசிக்காமல் நீக்கினார்கள். கடந்த சில மாதங்களாக நடந்த விஷயங்களை யோசித்தேன். நான் இந்த பொறுப்பில் இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்களா? என்று எனக்குத் தெரியவில்லை. எனது ரோல் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. அணி தேர்வு விஷயத்தில் நான் வெளியேற்றப்பட்டு விட்டேன்.

ஒரு போட்டிக்கு முன்பாக நாம் திட்டங்கள் தீட்டுவதற்கு சம்பந்தப்பட்ட எல்லோருடனும் தொடர்பு கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதெல்லாம் சேர்ந்து நான் இனி இந்த பதவியில் தொடர முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன். எனவே நான் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே கில்லெஸ்பியுடன் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கேரி கிறிஸ்டன் சமீபத்தில் அந்நாட்டு வாரியத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article