சென்னை: பாகிஸ்தான் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 7 மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: இந்திய மீனவர்கள் 14 பேர் (7 மீனவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்) குஜராத்தின் போர்பந்தரில் இருந்து இயந்திர படகுகளில் மீன் பிடிக்க சென்றபோது 3-1-2024 அன்று பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டு ஏறக்குறைய 10 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், மீனவர்களின் தற்போதைய நிலை குறித்தோ, அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் குறித்தோ எவ்வித தகவலும் இல்லை.
மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக நீண்டகாலமாக நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. பொருளீட்டும் மீனவர்கள் இல்லாததால் அவர்களை சார்ந்துள்ள குடும்பத்தினர் மிகுந்த மனவேதனையுடன் உள்ளனர். பாகிஸ்தான் கடற்படையினரால் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் விடுவிக்க உறுதியான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
The post பாகிஸ்தான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 7 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.