பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட வாலிபர் அடித்துக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்

3 hours ago 2

மங்களூரு,

கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு புறநகர் குடுப்பு கிராமத்தில் கடந்த 27-ந்தேதி கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. அந்த சமயத்தில் வாலிபர் ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். மேலும் உருட்டுக்கட்டையாலும் அவரை தாக்கினர்.

இதில் முதுகு, அடிவயிற்றில் பலத்த காயம் அடைந்த அந்த வாலிபரை அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அந்த வாலிபர் சிகிச்சை பலன் அளிக்காமல் 28-ந்தேதியே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த மங்களூரு புறநகர் போலீசார் விரைந்து சென்று, வாலிபர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வாலிபர் இறப்பு தொடர்பாக முதலில் மர்மசாவு என போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொலையானவர் யார் என்பது பற்றியும் முதலில் தெரியாமல் இருந்தது. பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கொலையான வாலிபர் பற்றி அடையாளம் தெரிந்தது.

அவர் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள புல்பள்ளி கிராமத்தை சேர்ந்த அஷ்ரப் (வயது 28) என்பதும், இவர் மங்களூருவில் தனியாக தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் கிரிக்கெட் போட்டியின் போது அஷ்ரப் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டதால், 20-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் அவரை கொடூரமாக தாக்கியதும், இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், இந்த கொலை தொடர்பாக தீபக்குமார் உள்பட 20 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், சிலரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Read Entire Article