
மும்பை,
ஐ.பி.எல். தொடரில், நேற்று நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாம் கர்ரன் 88 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 72 ரன்கள் அடித்தார்.
10-வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 8-வது தோல்வியாகும். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை இழந்து முதல் அணியாக வெளியேறியது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த சீசனில் வெற்றி பெற ரவிச்சந்திரன் அஸ்வினை கழற்றி விட வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார். எனவே அவரை கழற்றி விட்டால் ரூ.9.75 கோடிகளை வைத்து தற்சமயத்தில் பார்மில் உள்ள வீரர்களை வாங்க முடியும் என்று சஞ்சய் பங்கர் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "சென்னை அணி நிர்வாகம் அஸ்வினை தக்கவைத்துக்கொள்கிறார்களா இல்லையா என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் பணம் அங்கே பூட்டப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுடைய ஏலத்தொகையை அதிகமாக்க விரும்புவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் இந்த சீசனில் அஸ்வினை முழுமையாக பயன்படுத்தவில்லை.
எனவே அவர்கள் அவரை மீண்டும் பயன்படுத்த விரும்ப மாட்டார்கள். எனவே அவரை கழற்றி விட வாய்ப்புள்ளது. அஸ்வின் மற்றும் பதிரனா ஆகியோரை வைத்திருக்கலாமா? அல்லது அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை கண்டறியலாமா? என்று சென்னை நிர்வாகம் இந்நேரம் யோசிக்கத் தொடங்கியிருப்பார்கள்" என்று கூறினார்.