ஸ்ரீநகர் : நாடு முழுவதும் 21 விமான நிலையங்கள் மே 10ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப். 22ம் தேதி 26 சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படையின் ரபேல் போர் விமானங்கள் குண்டு வீசி அழித்தன.இந்த தாக்குதலில் சுமார் 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் இருநாடுகளிலும் பதற்றம் தொற்றிக்கொண்டது. பாகிஸ்தான் பதிலடி தருவதை தடுக்க எல்லையில் முப்படைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டன. இதையும் மீறி காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையடுத்து பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் உள்ள இந்திய விமான நிலையங்களில் விமான சேவைகளை இந்திய அரசு நிறுத்தியுள்ளது. ஸ்ரீநகா், ஜம்மு, லே, அமிருதசரஸ், பதான்கோட், சண்டீகா், ஜோத்பூா், ஜெய்சால்மா், சிம்லா, தா்மசாலா, ஜாம்நகா், கிஷண்கா், ராஜ்கோட், பிகானீா், குவாலியா் உள்பட வட இந்தியா மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள் நேற்று இரவு முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.ஏா்இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏா் போன்ற விமான நிறுவனங்கள், மேற்கண்ட நகரங்களுக்கான விமான சேவையை மே 10ம் தேதி வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. ஏற்கெனவே முன்பதிவு செய்தவா்களுக்கு கட்டணம் திருப்பியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னை விமான நிலையத்தில் 5 வருகை விமானங்கள், 5 புறப்பாடு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன. போர் பதற்றம் காரணமாக இந்திய அரசு வான் மண்டல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஹிண்டன், மும்பை, சண்டிகர், ஷிவமோகா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே பாகிஸ்தான் தாக்குதல் நடத்தலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எல்லையோர நகரங்களில் இரவு 12 மணி முதல் காலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள எல்லையோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. குறிப்பாக ராஜஸ்தானில் பிகானிர், பார்மல், ஜெய்சால்மர் உள்ளிட்ட நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் சந்தேகப்படுபவர்கள் இருந்தால் கண்டதும் சுட எல்லைப் பாதுகாப்புப் படைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்லை முழுவதும் சீல் வைக்கப்பட்ட நிலையில் அதனை ஒட்டிய பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
The post பாகிஸ்தானை எதிர்கொள்ள தயாராகும் இந்தியா: எல்லையில் கண்டதும் சுட உத்தரவு; 21 விமான நிலையங்கள் மூடல்; மின்சாரம் நிறுத்தம்!! appeared first on Dinakaran.