புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடியில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்திய ராணுவம் பதிலடி தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பு போர் நிறுத்த அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தற்போது எல்லை மாநிலங்களில் அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவுக்கு பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இவை நேரடி ராணுவ செலவுகள், வர்த்தக சிக்கல்கள் மற்றும் பங்குச் சந்தை நிச்சயமற்ற சூழல் ஆகியன ஏற்பட்டன. முழுமையான புள்ளிவிவரங்கள் கிடைக்கப் பெறவில்லை என்றாலும் கூறட, உத்தேச அடிப்படையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரம் சார்ந்த இழப்புகள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன.
ஆபரேஷன் சிந்தூரில் ரஃபேல் போர் விமானங்கள், எஸ்சிஏஎல்பி மற்றும் ஹாம்மர் ஏவுகணைகள், ஸ்கை ஸ்டிரிக்கர் ட்ரோன்கள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாயாக இருக்க வாய்ப்புள்ளது. உதாரணமாக, ஒரு ரஃபேல் விமானத்தின் விலை சுமார் 700 முதல் 800 கோடி ரூபாய், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் ஒரு முறை பயன்பாட்டு செலவு நூற்றுக்கணக்கான கோடியாக மதிப்பிடப்படும். மேலும், இந்தியா 5 வீரர்களையும், மூன்று போர் விமானங்களையும் (ரஃபேல் உட்பட) இழந்துள்ளது. மேலும் 2000 முதல் 3000 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருக்கலாம். பாகிஸ்தானுடனான வர்த்தகம், குறிப்பாக ஏற்றுமதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால், 2024ல் பாகிஸ்தானுக்கு இந்தியாவின் ஏற்றுமதி (சுமார் $400 மில்லியன்) முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூவால் சர்வதேச சந்தைகளில் இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டது.
பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 7ம் தேதி தொடங்கிய பதிலடி தாக்குதல் நாளின் போது மட்டும் இந்திய பங்குச் சந்தைகள் (சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி) கடுமையான ஏற்ற இறக்கத்தை சந்தித்தன. இந்திய ரூபாய் மதிப்பு 31 பைசா குறைந்து ஒரு டாலருக்கு 84.66 ஆக சரிந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு திரும்பப் பெறப்படுவதற்கான அபாயம் மேலும் பலவீனப்படுத்தியது. வடமாநிலங்களில் விமான நிலையங்கள் மூடப்பட்டதால் விமானத் துறை வெகுவாக பாதிக்கப்பட்டது; சர்வதேச நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் பாகிஸ்தான் வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், பெரும் இழப்பு ஏற்பட்டது. மேலும் எரிபொருள் விலை உயர்வால் விமானக் கட்டணங்கள் 10 முதல் 15% வரை உயர்ந்தன. ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. கடந்த 2024ல் 23 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் ஜம்மு – காஷ்மீருக்கு வந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரால் இந்தியாவுக்கு ஏற்பட்ட மொத்த பொருளாதார இழப்பு ரூ.50,000 கோடிக்கு மேல் இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. இதில் ராணுவ செலவுகள் ரூ.20,000 முதல் 30,000 கோடி, வர்த்தக இழப்புகள் ரூ.5,000 கோடி, சுற்றுலா மற்றும் பங்குச் சந்தை பாதிப்புகள் ரூ.15,000 முதல் 20,000 கோடி வரை அடங்கும். இந்தியாவின் 2024-25ம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு மட்டும் ரூ.6.21 லட்சம் கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையால் பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலு், கூடுதல் செலவு ஆக வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில், இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் தொடர்ந்தால், பொருளாதார இழப்பு மேலும் அதிகரிக்கலாம். ஆனால் ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து, பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச ஆதரவு மூலம் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களை சீர்படுத்த முடியும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
The post பாகிஸ்தானுக்கு எதிராக 4 நாட்கள் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ அதிரடியால் இந்தியாவுக்கு ரூ.50,000 கோடி இழப்பு?: பொருளாதார மறுசீரமைப்பு மூலம் ஈடுகட்ட ஒன்றிய அரசு முடிவு appeared first on Dinakaran.