
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மல்லாக்கோட்டை கிராமத்தில் மேகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரி செயல்படுகிறது. இந்த குவாரியை மேகவர்ணம் என்பவர் நடத்தி வருகிறார். இந்த குவாரியில் சுமார் 100 அடி ஆழத்திற்கு பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
100 அடி ஆழத்தில் நேற்று 18 தொழிலாளர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் பாறைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த பெரிய ராட்சத பாறைகள் திடீரென பயங்கர சத்தத்துடன் மேலே இருந்து உருளத்தொடங்கின. இந்த சத்தம் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அங்கிருந்து ஓடினர்.
12 தொழிலாளர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். மற்ற 6 பேர் மீதும் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து நசுக்கின. தொடர்ந்து அந்த பாறைகளின் மீதும் மேலும் சில பாறைகள் உருண்டு விழுந்ததால் அவர்கள் பாறைகளுக்குள் முழுவதுமாக புதைந்தனர். மேலும் பொக்லைன் எந்திரங்கள் மீதும் பாறைகள் விழுந்து அவற்றை மூழ்கடித்தன.
இந்த பயங்கர சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த சக தொழிலாளர்கள் கத்தி கூச்சலிட்டனர். இதுதொடர்பாக உடனடியாக போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சிங்கம்புணரி, திருப்பத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தகவல் அறிந்த அப்பகுதி மக்களும் அங்கு திரண்டனர்.
பாறையின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசீஸ்ராவத், திருப்பத்தூர் துணை சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோரும் வந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர்.
ஒவ்வொரு பாறையாக அகற்றி ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர். இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய மல்லாக்கோட்டை ஓடைப்பட்டியை சேர்ந்த முருகானந்தம் (வயது 47), கீழவளவு ஈ.மலம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (52), தூத்துக்குடியை சேர்ந்த மைக்கேல்(47) ஆகியோரை நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு மீட்டனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகானந்தம், ஆறுமுகம் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மைக்கேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இடிபாடுகளில் சிக்கிய மேலும் 3 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்தது. மேலும் சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர் கீழவளவு ஈ.மலம்பட்டியை சேர்ந்த ஆண்டிசாமி(50), சேவல்பட்டியை சேர்ந்த கணேசன்(47) ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். பாறை விழுந்ததில் அவர்களது உடல்கள் சிதைந்து போய் இருந்தன.
பொக்லைன் டிரைவரான ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹர்ஷித் (28), ராட்சத பாறைகளின் அடியில் சிக்கினார். அவரை மீட்க போலீசாரும், தீயணைப்பு துறையினரும் போராடினர். மாலை வரை போராடியும் அவர்களால் ஹர்ஷித்தை மீட்க முடியவில்லை. இதைதொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து 30 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் ஹர்ஷித்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பெரிய பாறைகளுக்குள் புதைந்து கிடக்கும் பொக்லைன் எந்திரத்தின் அடியில் சிக்கி இருப்பதால் மீட்பு பணி இரவில் நீண்ட நேரம் வரை நீடித்தது. இந்த நிலையில், 400 அடி பள்ளத்தில், பாறை இடுக்கில் சிக்கி இருந்த பொக்லைன் டிரைவர் ஹர்ஷித்தின் உடல் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. அவரின் உடல் மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. 4 பேரின் உடல்கள் ஏற்கனவே மீட்கப்பட்ட நிலையில், 5-வது நபரின் உடலும் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக எஸ்.எஸ்.கோட்டை போலீஸ் நிலையத்தில் மல்லாக்கோட்டை கிராம அலுவலர் பாலமுருகன் புகார் அளித்தார். அதன்பேரில் குவாரி உரிமையாளர் மேகவர்ணம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.