ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் விவகாரத்தில் சுமுக முடிவு: ஜி.கே.மணி தகவல்

6 hours ago 4

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் கடந்த 15, 16-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 9 மாவட்ட செயலாளர்கள், 11 மாவட்ட தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், 82 மாவட்ட செயலாளர்கள், 80 மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும் கட்சிக்குள் அப்பா, மகன் இருவரிடையே கோஷ்டி பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், கட்சிக்குள் அப்பா, மகன் என்ற கோஷ்டி பிரச்சினை ஏதுமில்லை என்று டாக்டர் ராமதாஸ் திட்டவட்டமாக மறுத்தார். இதனால் கட்சியினாிடையே தொடர்ந்து பரபரப்பும், குழப்பமும் நீடித்து வருகிறது.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், எல்லா கட்சிகளிலும் சிறிய பிரச்சினை, சலசலப்பு, நெருக்கடி ஏற்படுவது இயல்புதான். அவ்வாறுதான் தற்போது பாமகவிலும் நெருக்கடியான சூழல் உருவாகி இருக்கிறது. அதை நான் மறைத்து பேசவில்லை என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில், இன்று தைலாபுரம் தோட்டத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இன்றைக்கு சமூக நீதிப்பேரவை வழக்கறிஞர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டங்களின் நோக்கம் ஒவ்வொரு அமைப்பையும் வலுப்படுத்த வேண்டும் என்பதுதான்.சித்திரை முழு நிலவு மாநாட்டின் தொடர்ச்சியாக கட்சியை அமைப்பு ரீதியாகத் தயார்படுத்தி தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதேபோன்று நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தியுள்ளோம். நல்ல சுமுகத் தீர்வு எட்டப்பட்டுள்ளது.

நெருக்கடி நிலை, சலசலப்பு எல்லாம் மாறிவிட்டது. சுமுக நிலை எட்டப்பட்டுள்ளது. மிக விரைவில் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் சந்தித்துப் பேசுவார்கள். விரைவில் அது நடக்கும். அவர்களே கூட்டாக அறிவிப்பார்கள். கூட்டணி தொடர்பாக தற்போது எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. கூட்டணி என்பது தேர்தல் நெருங்கும் போது பேசி முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article