கராச்சி,
நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இதில் நியூசிலாந்து தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் கராச்சியில் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர்களாக தெம்பா பவுமா மற்றும் டோனி டி ஜோர்ஜி ஆகியோர் களம் இறங்கினர். இதில் டோனி ஜி ஜோர்ஜி 22 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து மேத்யூ பிரீட்ஸ்கே களம் புகுந்தார்.
பிரீட்ஸ்கே - பவுமா இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் பவுமா 82 ரன்னிலும், பிரீட்ஸ்கே 83 ரன்னிலும், அடுத்து வந்த கிளாசென் அதிரடியாக ஆடி 87 ரன் எடுத்த நிலையிலும் அவுட் ஆகினர். இதையடுத்து கைல் வெர்ரையன் மற்றும் கார்பின் போஷ் ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டனர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 352 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஷாகின் அப்ரிடி 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 353 ரன் எடுத்தால் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் பாகிஸ்தான் ஆட உள்ளது.