
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கரக் மாவட்டத்தில் உள்ள மிர் கலம் பண்டாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது.
இந்த என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், சிலர் அப்பகுதியில் இருந்து தப்பியோடியதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் கக்கீமுல்லா குழுவை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். இதற்கிடையே, தப்பியோடிய பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் தேடி வருகின்றனர்.