பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியா.. S-400 வான் பாதுகாப்பு அமைப்பின் வல்லமை

9 hours ago 2

ஜம்மு காஷ்மீர்,

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.

இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டநிலையில், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகி உள்ளது.

இதனிடையே ஜம்முவில் நேற்று இரவு (மே 8ம் தேதி) பாகிஸ்தான் ராணுவத்தினர் டிரோன் தாக்குதல் நடத்தியநிலையில், இந்திய ராணுவத்தினர் இதனை 'S-400 சுதர்சன் சக்ரா' என்ற ஏவுகணை மூலம் தடுத்து நிறுத்தினர். ஆசியா கண்டத்தில் இந்தியாவிடம் மட்டுமே S-400 வான் பாதுகாப்பு அமைப்பு உள்ளது.

இந்தியாவில் சுதர்சன சக்ரா என அழைக்கப்படும் S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பானது ரஷியாவால் உருவாக்கப்பட்டது. 600 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தும் நமது எல்லையை நோக்கி வரும் இலக்கை அடையாளம் காணும் திறன் கொண்டுள்ளது. அதோடு, 400 கிலோ மீட்டர் ரேஞ்ச் வரை பாய்ந்து, இடைமறித்து இலக்குகளை தகர்க்கூடிய வல்லமையை கொண்டுள்ளது.

இதன் மூலம் பரந்த வான் எல்லையை கூட மிகவும் பாதுகாப்பானதாக உறுதி செய்ய முடியும். இதன் மூலம் ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை உதாரணமாக, போர் விமானங்கள், குரூஸ் ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் போன்றவற்றை பல்வேறு தூரம் மற்றும் உயரத்தில் இருக்கும்போது கூட ஒரே நேரத்தில் தாக்கி தகர்க்க முடியும்.

S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பானது மூன்று முக்கிய பாகங்களை கொண்டுள்ளது. அதில் ஏவுகணை லாஞ்சர், மிகவும் சக்தி வாய்ந்த ரேடார் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகியவை அடங்கும். S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பானது ஒரே நேரத்தில் 36 ஏவுகணைகளையும், தொடர்ந்து 72 ஏவுகணைகளையும் அடுத்தடுத்து சுடும் திறன் கொண்டுள்ளது.

நான்கு வெவ்வேறு விதமான ஏவுகணை கொண்டு 400 கிமீ, 250 கிமீ, 120 கிமீ மற்றும் 40 கிமீ தூரத்தில் உள்ள இலக்குகளை கூட துல்லியமாக தாக்கி அழிக்கும். எளிதில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இதனை மாற்ற முடியும். சூப்பர் சோனிக் தொடங்கி ஹைப்பர் சோனிக் வேகத்தில் ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டுள்ளது.

எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் தாக்குதல் நடத்துவதில் முன்னணியில் உள்ள, அமெரிக்காவின், F-35 போர் விமானத்தை கூட லாக் செய்து தாக்கும் திறன் S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பிற்கு இருப்பதாக ரஷியா தெரிவித்திருந்தது.

நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டிருப்பதால், S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை மிகவும் ஆபத்தானதாக நேட்டோ அமைப்பு கருதுகிறது. இதன் காரணமாக 2018ம் ஆண்டு ரஷியாவுடன் மேற்கொள்ளப்பட்ட, S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தைத்தை கைவிடுமாறு, அமெரிக்கா எச்சரித்தது.

இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் நேரடியாகவே இந்தியாவுக்கு வந்து, ரஷியா உடனான ஒப்பந்தத்தால் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கும் என்று கூறியிருந்தார். அதேநேரம், S-400 அண்டை நாட்டு எதிரிகளான சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து வரும் சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒரு முக்கிய திறன் இடைவெளியை நிரப்புகிறது என இந்தியா விளக்கமளித்தது.

மேலும் தங்கள் நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எந்த நடவடிக்கையையும் இந்தியா எடுக்கும் என்றும், அதில் வெளிநாட்டு அழுத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக குறிப்பிட்டது. அதன் விளைவாகவே நேற்று, S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை எல்லையில் பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. 

Read Entire Article