புதுடெல்லி,
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி உள்ளன.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 10-ந்தேதி தொடங்கியது. 17-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. 18-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடந்தது. 20-ந்தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லியில் தற்போது ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி, இந்த முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் உள்ளது.
இந்நிலையில், கிழக்கு டெல்லியின் விஷ்வாஸ் நகர் சட்டசபை தொகுதியில் ஆம் ஆத்மி கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் மீனாட்சி சர்மா கூறும்போது, பா.ஜ.க.வில் உள்ள எந்த தலைவரும் அடிமட்ட அளவில் வேலை பார்க்கவில்லை என்றார்.
அப்போது, கூடியிருந்த அக்கட்சியின் தொண்டர்கள், பா.ஜ.க.வின் மணமகன் யார்? ஒருவரும் இல்லை, ஒருவரும் இல்லை என கோஷம் எழுப்பினர்.
பா.ஜ.க.வில் உட்கட்சி பூசலால், முதல்-மந்திரி வேட்பாளராக யாரும் அறிவிக்கப்படவில்லை. பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரம் ஆனது, ஒரு மணமகன் இல்லாமல் திருமண ஊர்வலம் போவது போன்றது என கூறியுள்ளார். ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. நகலெடுத்து உள்ளது என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறினார்.