
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்குமேல் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.
தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., பா.ம.க., பா.ஜ.க., நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுக்கத்தொடங்கி விட்டன. கூட்டணி குறித்தும் அரசியல் கட்சிகள் தற்போதே முடிவுகளை எடுக்கத்தொடங்கி விட்டன.
இதனிடையே, 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற பா.ஜ.க. தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவராக அண்ணாமலை வேண்டும், அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் பா.ஜ.க. மாவட்ட செயலாளர் மேலக்கோடுமலூர் ஊராட்சி மன்ற தலைவர் செய்யாமங்கலம் கே. சரவணன் பெயரில் பரமகுடியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், வேண்டும்... வேண்டும்... மாநில தலைவராக அண்ணாமலை வேண்டும்... வேண்டாம்... வேண்டாம்... அ.தி.மு.க்.அ கூட்டணி வேண்டாம்...' என எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் பரமகுடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.