பஹல்காம் தீவிரவாதியில் ஒருவன் பாகிஸ்தான் மாஜி கமாண்டோ வீரர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

2 weeks ago 4

ஸ்ரீநகர்:பஹல்காம் தீவிரவாதியில் ஒருவன் பாகிஸ்தானின் மாஜி கமாண்டோ வீரர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வரும் நிலையில், 100க்கும் மேற்பட்டோரை காவலில் எடுத்து காஷ்மீர் போலீசார் தனியாக விசாரித்து வருகின்றனர். 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் 3 பேரின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது.

தொடர் விசாரணைகளில், தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாக அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி ஹாஷிம் மூசா என்பவன், பாகிஸ்தானின் சிறப்பு காவல் படையின் (எஸ்எஸ்ஜி) முன்னாள் கமாண்டோ வீரராக இருந்தார் என்பது தெரியவந்துள்ளது. தற்போது பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பா உறுப்பினராக இருக்கும் ஹாஷிம் மூசா, பாதுகாப்புப் படையினர் மற்றும் உள்ளூர்வாசிகள் அல்லாதவர்கள் மீது தாக்குதல்களை நடத்த ஜம்மு-காஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளான்.

உளவு அமைப்புகள் நடத்திய விசாரணையின் போது மூசாவின் ராணுவப் பின்னணி உறுதி செய்யப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி கூறினார். தீவிரவாதி ஹாஷிம் மூசா, ஏற்கனவே கடந்தாண்டு அக்டோபரில், கங்காங்கிர், காண்டர்பாலில் நடந்த தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடையவன் ஆவான்.

மேலும் பாரமுல்லாவில் இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் இரண்டு ராணுவ போர்ட்டர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் இவனுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் ராணுவம் கூறி வந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய ஒருவன் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டுள்ளான் என்பது அம்பலமாகி உள்ளது.

* ‘ஜிப்லைன்’ ரோப் ஆபரேட்டருக்கு தொடர்பு?
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு ‘ஜிப்லைன்’ ஆபரேட்டருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்த விசாரணை நடைபெறும் நிலையில், சுற்றுலா பயணியின் வீடியோ வைரலாகி வருகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்த போது அங்கிருந்த சுற்றுலா பயணி ரிஷி பட் என்பவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘நான் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளேன். சம்பவம் நடந்த நேரத்தில் ‘ஜிப்லைனில்’ சென்றேன். அப்போது துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டன. ஜிப்லைன் ஆபரேட்டர், ‘அல்லாஹு அக்பர்’ என்று கத்தினார். அதன் பிறகு துப்பாக்கிச் சூடு நடந்தது. நான் ரோப்வேயில் இருந்ததால், என் உயிர் காப்பாற்றப்பட்டது.

தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் அணியும் உடை போன்ற உடையணிந்திருந்தனர். துப்பாக்கிச் சூடு தொடங்கியபோது, ​​சம்பவ இடத்தில் உள்ளூர்வாசிகள் யாரும் இல்லை. அவர்கள் நிலையையை உணர்ந்து ஓடிவிட்டனர். சிலர் மட்டுமே உதவ வந்தனர்’ என்று கூறினார். சுற்றுலா பயணி ரிஷி பட்டின் பேட்டியை அடிப்டையாக கொண்டு, ஜிப்லைன் ஆப்ரேட்டருக்கும், துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

* சிந்து நதியில் தண்ணீர் குறைப்பு பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் மக்கள் போராட்டம்
பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய சிந்து நதி நீரின் அளவை இந்தியா குறைத்துவிட்டதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கில்கிட்-பால்டிஸ்தானில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த போராட்டம் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தலைவலியாக உள்ளது. மேலும் கில்கிட்-பால்டிஸ்தான் போன்ற பிரச்னைக்குரிய பகுதிகளில், மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவது அரசுக்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

* இந்திய விமானங்களுக்கு தடை தினமும் ரூ.6.5 கோடியை இழக்கும் பாகிஸ்தான்
பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான முடிவுகளை எடுத்ததால், தன் நாட்டின் வான்வழியை இந்தியா பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்தது. அதனால் தற்போது நாள் ஒன்றுக்கு 6.5 கோடி ரூபாய் வரை இழப்பை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. பாகிஸ்தானின் வான்வழியை பயன்படுத்தும் இந்திய விமானங்களிடமிருந்து ஒவ்வொரு விமானத்திற்கும் சுமார் 50,000 ரூபாய் வரை கட்டணமாக பெறப்பட்டுவந்தது.

பெரிய விமானங்களுக்கு இந்த தொகை மேலும் அதிகமாக இருக்கும். தற்போது தடை விதிக்கப்பட்டதால் தினசரி 6.5 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருகிறது. முந்தைய 2019ல் நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாலாகோட் விமானத் தாக்குதல் நடத்தியபோது, இதேபோல பாகிஸ்தான் வான்வழியை முடக்கியது. அப்போது பாகிஸ்தானுக்கு ரூ.450 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது.

* பஹல்காம் தாக்குதலுக்கு 4 நாட்களுக்கு முன்பு ‘பேதாப்’ பள்ளத்தாக்கில் சுற்றித் திரிந்த தீவிரவாதிகள்
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜித் ரமேசன் என்பவர், கடந்த 18ம் தேதி தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக காஷ்மீருக்கு சென்றிருந்தார். சுற்றுலா பகுதிகளுக்கு தனது குடும்பத்தினரை அழைத்து சென்றார். அவர் தனது குடும்பத்தினருடன் செல்போனில் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்து கொண்டிருந்தபோது, ​​அந்த வழியாகச் சென்ற தீவிரவாதிகளும் அவரது வீடியோவில் சிக்கினர். பஹல்காம் நகரத்திலிருந்து ஏழரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேதாப் பள்ளத்தாக்கு என்ற சுற்றுலா தலத்திலிருந்து படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் இவையாகும்.

அவர் தனது மகளின் நடன வீடியோவை இங்கே படம்பிடித்துக்கொண்டிருந்தபோது, ​​அந்த வழியாகச் சென்ற தீவிரவாதிகளின் உருவம் கேமராவில் பதிவாகி உள்ளது. இருப்பினும், தீவிரவாதத் தாக்குதல் கடந்த 22ம் தேதி நடந்தது. அதன்பின் பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளின் ஓவியங்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டனர். இவற்றை ஒப்பிட்டு பார்த்ததன் மூலம், தனது செல்போனில் பதிவான வீடியோ காட்சிகளுடன் தீவிரவாதிகளின் முகமும் ஒத்துபோவதாக ஸ்ரீஜித் ரமேசன் அடையாளம் கண்டுள்ளார்.

இதன் மூலம், அவர் நேரடியாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளை அணுகி, அவர்களிடம் வீடியோ காட்சிகளை ஒப்படைத்தார். அந்த வீடியோவை ஸ்ரீஜித் ரமேசனிடம் பெற்றுக் கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அதன் உண்மைத்தன்மை மற்றும் தீவிரவாதிகளின் அடையாளம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

* ராஜதந்திரம் வேண்டும்: பாக்.பிரதமருக்கு நவாஸ் அறிவுரை
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் சகோதரரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் கடந்த சில நாட்களுக்கு முன் லாகூரில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, ​​இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது இந்தியாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்று நவாஸ் ஷெரீப் தனது சகோதரருக்கு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடனான நல்லுறவை ராஜதந்திர வழிகள் மூலம் மீட்டெடுக்க வேண்டும் என்றும் நவாஸ் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* பஹல்காம் தாக்குதலை நடத்தியது இந்தியாதான்: பாக். மாஜி கிரிக்கெட் வீரர் அப்ரிடி குற்றச்சாட்டு
பஹல்காம் தாக்குதலை நடத்தியது இந்தியாதான் என்று பாகிஸ்தான் மாஜி வீரர் ஷாஹித் அப்ரிடி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், ‘பஹல்காம் தாக்குதலை இந்தியாதான் செய்தது. அரைமணிநேரம் தாக்குதல் நடந்தும் இந்திய ராணுவ வீரர் ஒருவர் கூட அங்கு வரவில்லை. இந்தியா தன்னுடைய சொந்த மக்களை கொன்றுவிட்டு பழியை பாகிஸ்தானின் மேல் சுமத்துகிறது’ என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

The post பஹல்காம் தீவிரவாதியில் ஒருவன் பாகிஸ்தான் மாஜி கமாண்டோ வீரர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article