புதுடெல்லி,
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில்சிபல் வலியுறுத்தி உள்ளார்.
அவர் கூறுகையில், 'இந்தியா மீது அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. இது தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு தொடர் ஒன்றை நடத்தி கண்டன தீர்மானம் நிறைவேற்றுமாறு பிரதமரை கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் இந்த நாடு உங்களுடன் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் உங்களுடன் இருக்கின்றன. ஏனெனில் இது நாட்டின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்' என தெரிவித்தார். மேலும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அடங்கிய குழு ஒன்றை முக்கியமான நாடுகளுக்கு அனுப்பி பாகிஸ்தான் மீது அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார்.