இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார் என பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசி உள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்று பேசியதாவது:
பஹல்காமில் சமீபத்தில் நடந்த சோக சம்பவம், நிரந்தர பழி சுமத்தும் விளையாட்டுக்கு இன்னொரு உதாரணமாகி உள்ளது. இது முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். இந்த விஷயத்தில் பொறுப்பான நாடாக பாகிஸ்தான் எந்தவொரு நடுநிலையான, வெளிப்படையான, நம்பகமான விசாரணையில் பங்கேற்க தயாராக இருக்கிறது.
நம்பகமான விசாரணை, ஆதாரங்கள் இல்லாமல் ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை இந்தியா தொடர்ந்து சுமத்தி வருவது வருத்தமளிக்கிறது. காஷ்மீர் பாகிஸ்தானின் கழுத்து நரம்பு என முகமது அலி ஜின்னா கூறி உள்ளார். ஐநா தீர்மானங்கள் இருந்த போதும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்த சர்ச்சை தீர்க்கப்படாமல் உள்ளது. காஷ்மீர் மக்கள் தங்கள் பெரும் போராட்டம் மற்றும் தியாகங்கள் மூலம் தங்கள் உரிமைகளை அடையும் வரையிலும் அவர்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளிக்கும்.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்து பாகிஸ்தானுக்கு சொந்தமான தண்ணீரை தடுக்க முயன்றால் முழு பலத்துடனும் வலிமையுடனும் பதிலடி கொடுப்போம். தண்ணீர் நமது உயிர் நாடி, முக்கியமான தேச நலன் சார்ந்த விஷயம். அது எந்த சூழலிலும் பாதுகாக்கப்படும். நமது நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க முழு தேசமும் பாகிஸ்தானின் ராணுவமும் ஆதரவாக நிற்கிறது. நமது வீரம்மிக்க ராணுவம், நாட்டின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் திறன் கொண்டது. எந்த சவாைலயும் சந்திக்க ராணுவம் தயாராக உள்ளது. எங்களின் அமைதியை பலவீனமாகக் கருதக்கூடாது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றல்ல, வேறானவை
“இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றல்ல, இரண்டும் வெவ்வேறு நாடுகள்” என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ பயிற்சி பள்ளியில் நேற்று பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசீம் முனீர் கலந்து கொண்டார். அப்போது பேசிய முனீர், “இந்தியா, பாகிஸ்தான் இரண்டுமே, இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றல்ல, வேறானவர்கள். இரண்டும் தனித்தனி நாடுகள் என்ற அடிப்படை நம்பிக்கையை கோட்பாடாக கொண்ட நாடுகள். வாழ்வின் அனைத்து அம்சங்களிலும், மதம், வழிபாடு, பழக்க, வழக்கங்கள், சிந்தனை, மரபுகள், விருப்பங்கள் உள்ளிட்ட அனைத்திலும் இந்துக்களிடமிருந்து முஸ்லிம்கள் வேறுபட்டவர்கள். நாம் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதை நம் முன்னோர்கள் நினைத்தார்கள். அதைப்பற்றி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும்” என தெரிவித்தார்.
The post பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு தயார்: பாக். பிரதமர் அறிவிப்பு appeared first on Dinakaran.