திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இல்லம் தேடி ரேஷன் திட்டத்தில் கொடைக்கானல் வட்டம் சின்னூர், பெரியூர் மலைக்கிராமங்களில் வசிக்கும் 110 குடும்ப அட்டைதாரர்களுக்கு சுதந்திரத்திற்கு பின்னர் முதல் முறையாக அவர்கள் வசிக்கும் பகுதிக்கு குதிரைகள் மூலம் ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் செயல்படுத்துவதில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையிலே மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பு செயல்பாடுகளின் காரணமாக கொடைக்கானல் வட்டம் வெள்ளகவி மலைக்கிராமத்தில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கான ரேஷன் பொருட்கள் அவர்கள் கிராமங்களுக்கே சென்று வழங்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக வெள்ளகவி ஊராட்சிக்குட்பட்ட சின்னூர், பெரியூர் மலைக்கிராமங்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கான ரேஷன் பொருட்கள் அவர்கள் கிராமங்களுக்கே சென்று வழங்கும் வகையில் குதிரைகளில் கொண்டு செல்லப்பட்டன.
* மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது
இதுகுறித்து கலெக்டர் சரவணன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றது முதல் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில், சமூகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள அனைத்து மக்களையும் பாதுகாக்கும் நோக்கில், அவர்களின் துயரை துடைக்க, பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.
மேலும், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் பொருட்கள் கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்க செய்ய வேண்டும் எனவும், அவர்கள் வசிக்கும் இல்லங்களுக்கு அருகிலேயே பொருட்களை விநியோகிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, கொடைக்கானல் வட்டம் வெள்ளகவி ஊராட்சி மலைக்கிராமம் என்பதால் சாலை வசதி இல்லாத காரணத்தினால் அங்கு வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய ரேஷன் பொருட்களை வட்டக்கானல் பகுதியில் பெற்று கொண்டு அங்கிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதை வழியாக தலைச்சுமையாகவும் மற்றும் குதிரைகளில் பொதி சுமை மூலமும் தங்களது வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.
வெள்ளகவி மக்கள், தங்கள் கிராமத்திற்கு ரேஷன் பொருட்களை கொண்டு வந்து வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். அவர்களின் நீண்டநாள் கோரிக்கையினை பூர்த்தி செய்யும் வகையில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பழநி எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோர் ஆலோசனையின் பேரில் இல்லம் தேடி ரேஷன் என்ற வகையில் வெள்ளகவி மலைக்கிராம மக்களுக்கான ரேஷன் பொருட்களை சுதந்திரத்திற்கு பின்னர் முதல் முறையாக அவர்கள் கிராமத்திற்கே கொண்டு சென்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
* வெள்ளகவியை தொடர்ந்து சின்னூர், பெரியூர்
அதன்படி, கொடைக்கானல் டவுன் 1 ரேஷன் கடையில் மலைக்கிராமமான வெள்ளகவி பகுதிக்குட்பட்ட 120 குடும்ப அட்டைகளில் 30 குடும்ப அட்டைதாரர்கள் வெளியூர்களில் தங்கி வேலை பார்ப்பதால் ஒரே நாடு ஒரே கார்டு திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் பெற்று வருகின்றனர். மீதமுள்ள 90 குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் கொடைக்கானல் அருகே வட்டக்கானல் பகுதியிலிருந்து குதிரைகள் மூலம் வெள்ளகவி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன.
இதேபோல் வெள்ளகவி ஊராட்சிக்குட்பட்ட பெரியூர், சின்னூர் ஆகிய மலைக்கிராமங்களில் உள்ள 110 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்களை அந்தந்த கிராமங்களுக்கே கொண்டு சென்று வழங்கப்பட்டது. கொடைக்கானல் டவுன்- 1 ரேஷன் கடைக்கு உட்பட்ட சின்னூர், பெரியூர் மலைக்கிராமங்களில் உள்ள 110 குடும்ப அட்டைதாரர்களுக்கு வாகனம் மூலம் கொடைக்கானலிலிருந்து காட்ரோடு வழியாக பெரியகுளம் முதல் சோத்துப்பாறை அணைக்கு செல்லும் வழியில் பெரியூர் கடப்பாறைக்குழி பகுதியில் வசிக்கும் 50 குடும்ப அட்டைதாரர்களுக்கு உப்புக்காடு என்னுமிடத்திலும், அதேபோல் உட்கடை கிராமமான சின்னூர் பழங்குடியினர் காலனியில் 16 குடும்ப அட்டைதாரர்களுக்கும், சின்னூர் பகுதியில் வசிக்கும் 44 குடும்ப அட்டைதாரர்களுக்கும் என மொத்தம் 60 குடும்ப அட்டைதாரர்களுக்கு கல்லாறு என்னுமிடத்தில் வைத்து மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் பொருட்களை பெற்று செல்லும் குடும்ப அட்டைதாரர்கள் சாலை வசதி இல்லாத காரணத்தினால் உப்புக்காடு என்னுமிடத்திலிருந்து மலை உச்சி பகுதிகளான பெரியூர் பகுதிக்கு 7 கிலோ மீட்டர் தூரமும், கல்லாறு என்னுமிடத்திலிருந்து சின்னூர் பகுதிக்கு 6 கிலோ மீட்டர் தூரமும் தலைச்சுமையாகவும், குதிரைகளில் பொதி சுமை மூலமும் கொண்டு சென்றனர்.
இப்பகுதி மலைக்கிராம மக்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் அவர்களுக்கான ரேஷன் பொருட்கள் உப்புக்காடு, கல்லாறு ஆகிய இடங்கள் வரை வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து குதிரைகளில் பெரியூர், சின்னூர் மலைக்கிராமங்களுக்கு அரசு சார்பில் கொண்டு செல்லப்பட்டன. அதன்படி, ஏப்ரல்- 2025 மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் அரிசி 2723 கிலோ, சர்க்கரை 153 கிலோ, பாமாயில் 110 பாக்கெட், துவரம் பருப்பு 110 கிலோ, மண்ணெண்ணெய் 50 லிட்டர் ஆகிய பொருட்கள் குதிரைகளில் கொண்டு செல்லப்பட்டன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சாலை வசதி இல்லாத மலைக்கிராமங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்ததுடன் இதற்கு ஏற்பாடு செய்த தமிழ்நாடு முதல்வர், மாவட்ட அமைச்சர்கள், எம்எல்ஏவிற்கு மனதார நன்றி தெரிவித்து கொண்டனர்.
The post இல்லம் தேடி திட்டத்தில் சுதந்திரத்திற்கு பின் முதல்முறையாக சின்னூர், பெரியூருக்கு குதிரைகளில் சென்றது ரேஷன் பொருட்கள்: மலைக்கிராம மக்கள் மகிழ்ச்சி, முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு appeared first on Dinakaran.