சென்னை: தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். நீதிக்கட்சி நிறுவனர்களில் முக்கியமானவரும், சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவராக விளங்கியவருமான பி.தியாகராயர். இவர் கடந்த 1852 ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி பிறந்தார். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக கருதப்படும் தியாகராயர், நீதிக்கட்சி என்ற அமைப்பை தொடங்கி,1921-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டார்.
இந்த அமைப்பு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சர் பதவி இவரைத் தேடி வந்தாலும் அதை மறுத்து வேறு ஒருவரை பொறுப்பேற்கச் செய்தார். இப்படி பல சிறப்புகளை கொண்ட சர். பிட்டி. தியாகராயரின் 174ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;
* பிட்டி தியாகராயர் அவர்கள் பிறந்தநாள்:
“கல்விக்கூடங்கள், தெருவிளக்குகள், குடிநீர் இணைப்பு, மதிய உணவுத் திட்டம் எனச் சென்னை மாநகரின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர். நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராக இருந்து, தன்னைத் தேடி வந்த முதலமைச்சர் பொறுப்பை மறுத்த மாண்பாளராக உயர்ந்தவர். எவருக்காகவும் தன் இயல்பை மாற்றிக்கொள்ளாத ‘வெள்ளுடை வேந்தர்’ எனப் பெயரும் பெற்றவர். இன்றைய நம் திமுக ஆட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே வலுவான கொள்கை அடித்தளம் அமைத்த எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம்!” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
The post தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.