
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு விளையாட்டு பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.
இதனிடையே வங்காளதேசத்தில் செயல்பட்டு வரும் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸுக்கு நெருக்கமானவரும் வங்கதேச ராணுவ ரைபிள்ஸ் படையின் முன்னாள் தலைவருமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம். பஸ்லுர் ரஹ்மான், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியாவின் 7 வடகிழக்கு மாநிலங்களையும் வங்காளதேசம் ஆக்கிரமிக்க வேண்டும் என்று முகமது யூனுஸுக்கு அவர் பரிந்துரைத்துள்ளார். இந்தியா -வங்காளதேசம் இடையேயான உறவில் சமீபகாலமாக கசப்புணர்வு அதிகரித்துவரும் நிலையில், முன்னாள் ராணுவ தலைவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
இதனிடையே இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதத்தில் வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் ஏ.எல்.எம். பஸ்லுர் ரஹ்மானின் சர்ச்சைக்குரிய கருத்தால் இந்த தொடரை ரத்து செய்ய பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரிலும் இந்தியாவின் பங்கேற்பு நிச்சயமற்றதாகவே உள்ளது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாது என்பதால் ஆசிய கோப்பை தொடர் திட்டமிட்ட படி நடைபெறுமா? என்பது சந்தேகமாகவே உள்ளது.