
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு விளையாட்டு பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி எல்லைப் பிரச்சனை காரணமாக 2008-க்கு பின் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை நிறுத்தி வைத்துள்ளது. அதே போல 2012-க்கு பின் இருதரப்பு தொடர்களில் பாகிஸ்தானுடன் விளையாடுவதையும் இந்தியா நிறுத்தியுள்ளது. அதனாலேயே 2023 ஆசிய கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் பாகிஸ்தான் சென்று விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கை, துபாயில் விளையாடி வெற்றியும் கண்டது.
இந்நிலையில், 2025 ஆசிய கோப்பை டி20 வடிவமாக இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் எல்லைப் பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கும் அல்லது பொதுவான இடமான இலங்கைக்கும் வந்து விளையாடுவதை நான் பார்க்கப் போவதில்லை என இந்திய முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
பி.சி.சி.ஐ எப்போதும் இந்திய அரசாங்கம் சொல்வதை செய்யும் நிலையில் இருக்கிறது. இந்த ஆசிய கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் என நினைக்கிறேன். அதற்குள் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். இல்லையெனில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் விளையாடுவதை நான் பார்க்கப் போவதில்லை. அதன் காரணமாக ஆசிய கவுன்சில் கலைக்கப்படலாம்.
அது போன்ற சூழ்நிலையில் நீங்கள் ஹாங்காங், அமீரகம் போன்ற அணிகளை வரவழைத்து 3 - 4 அணிகள் கலந்து கொள்ளும் பலதரப்பு தொடரை நடத்தலாம். இவை அனைத்தும் அடுத்த சில மாதங்களில் சூழ்நிலை எப்படி மாறுகிறது என்பதைப் பொறுத்தது. ஒருவேளை இந்தியாவும் ஆசிய கவுன்சிலில் இருந்து வெளியேறலாம். இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை வைத்து புதிய தொடரையும் இந்தியா நடத்தலாம்.
தற்போது நடைபெறும் நிலையை வைத்து பார்க்கையில் ஆசிய கவுன்சில் கலைக்கப்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஏனெனில், உங்களுடைய கவுன்சிலில் இருக்கும் முக்கியமான 2 நாடுகள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் ஒருவருக்கொருவர் விளையாட்டில் நட்பாக விளையாட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.