பஹல்காம் தாக்குதல் எதிரொலி; அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது - மத்திய அரசு

5 hours ago 4

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடிய தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடக்கும் இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு பிறகு இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படும். பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். பாதுகாப்பு, கடற்படை, விமான ஆலோசகர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து அழைக்கப்படுவர். பாகிஸ்தான் துதரக அதிகாரிகள் மே 1-ம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும். பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள் மே 1-ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும்.

பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை 30 ஆக குறைக்கப்படும். பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட SVES விசாக்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். SVES விசாவில் தற்போதுள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும். சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியாவிற்குள் பயணம் செய்ய அனுமதி இல்லை. சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தூதரக உதவிகளை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article