
டெல்லி,
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த தாக்குதல் நடத்தியவர்கள், தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் உலகின் எந்த எல்லையில் இருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக உள்துறை செயலாளர் தலைமையில் பாதுகாப்புப்படை தளபதிகள் இன்று ஆலோசனை நடத்தினர். உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் எல்லைப்பாதுகாப்புப்படை தளபதி தல்ஜித் சிங் சவுதிரி, தேசிய பாதுகாப்புப்படை தளபதி பிரிகு சீனிவாசன், அசாம் ரைபல்ஸ் தளபதி விகாஸ் லஹேரா, சஷாஸ்த்ரா சீமா பல் (எஸ்.எஸ்.பி) துணை தளபதி அனுபம் நிலிகர் சந்திரா உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்நாட்டு பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புப்படை மந்திரி நேற்று தெரிவித்திருந்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.