
சென்னை,
தமிழ்நாட்டில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டன. அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு நாள் முன்னதாக வெளியான பிளஸ்-2 பொதுத் தேர்வில் 95.03 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவும், மதியம் 2 மணிக்கு பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவும் வெளியாகிறது. கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-1 பொதுத் தேர்வை 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்கள், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகள், 4,755 தனித் தேர்வர்கள், 137 சிறை கைதிகள் என மொத்தம் 8 லட்சத்து 23 ஆயிரத்த 261 பேர் எழுதினார்கள்.
இதேபோல், மார்ச் மாதம் 28-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி வரை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறை கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினார்கள்.
இந்த நிலையில், தேர்வு முடிவு வெளியாக உள்ள நிலையில், மாணவ செல்வங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
" 2024-25ம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் இன்று வெளியிடுகிறோம். கற்றல் கற்பித்தல் இரண்டிற்குமான முடிவுகள் என்பதை மனதில் நிறுத்தி மகிழ்ச்சியோடு தன்னம்பிக்கையோடு தேர்வு முடிவுகளை எதிர்கொள்வோம். தேர்வு எழுதிய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.