
ஜம்மு,
காஷ்மீரை சேர்ந்த துணி வியாபாரி நஜாகத் அலி. மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் பைசரண் பள்ளத்தாக்கிற்கு தன்னுடைய வாடிக்கையாளர்கள் சிலரை சுற்றுலாவுக்கு அழைத்து கொண்டு சென்றபோது அந்த துயர சம்பவம் நடந்தது. சுற்றுலாவுக்கு வந்த 26 பேர் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதலில் பலியானார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரிடமும் பயங்கரவாதிகள், அவர்களுடைய மதம் என்னவென கேட்டு, பின்னர் சுட்டு படுகொலை செய்தபோது, இந்த நபர் உயிரை பணயம் வைத்து, 11 பேரை காப்பாற்றி உள்ளார். அதுபற்றிய விவரங்களை பேட்டியில் அதிர்ச்சியுடன் விவரித்து உள்ளார்.
அவர், சத்தீஷ்காரில் உள்ள சிரிமிரி என்ற சிறிய நகரத்தில் தங்கி சால்வைகளை விற்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, கிடைத்த வாடிக்கையாளர்களில் 4 குடும்பத்திலுள்ள 11 பேரை சுற்றுலாவுக்கு அழைத்து சென்றார். முதலில், ஜம்மு நகரில் சென்றிறங்கிய அவர்களை ஸ்ரீநகர் மற்றும் குல்மார்க் பகுதிகளுக்கு அழைத்து சென்று காண்பித்துள்ளார்.
கடைசி நாளில் பஹல்காமுக்கு செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. அவர்களை வீட்டுக்கு வரவழைத்து விருந்து கொடுப்பதற்காக அவர் முடிவு செய்துள்ளார். பின்னர், ஏப்ரல் 21-ந்தேதி இரவு பஹல்காமில் ஓட்டல் ஒன்றில் பொழுது கழிந்தது. அடுத்த நாள் காலை பைசரண் பள்ளத்தாக்கிற்கு சென்றடைந்தனர்.
சுற்றுலா வந்த அவருடைய வாடிக்கையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக பொழுதுபோக்கில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஏதோ பட்டாசு வெடிப்பதுபோன்ற சத்தம் கேட்டது. கரடிகள் போன்ற வனவிலங்குகளை விரட்ட பட்டாசு வெடிக்கிறார்கள் என முதலில் நினைத்திருக்கின்றனர்.
ஆனால், துப்பாக்கி சூடு தொடர்ந்ததும், அவர்களுக்கு பயம் தொற்றி கொண்டது. நஜாகத் அலி உடனடியாக, குழந்தைகளை தரையில் படுக்க வைத்து, அவரும் படுத்து கொண்டார். மற்றவர்களும் அதனையே செய்தனர்.
இதுபற்றி அவர் கூறும்போது, அவர்களை நான் பாதுகாக்க வேண்டும். பாதுகாப்பாக திரும்ப கொண்டு சேர்க்க வேண்டும் என முடிவு செய்தேன். குழந்தைகளை தூக்கி கொண்டு, அவர்களையும் அழைத்து கொண்டு பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வெளியேற தொடங்கினேன். 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு நாங்கள் ஓடியே சென்று பஹல்காமை அடைந்தோம் என்றார்.
அந்த தருணத்தில், குடிமக்களையும், சுற்றுலாவாசிகளையும் கொல்ல கூடாது என்ற வரைமுறையை பயங்கரவாதிகள் கடந்திருந்தனர். இந்த கொடூர சம்பவத்தின்போது, சையது அடில் உசைன் ஷா என்பவர், பயங்கரவாதியின் துப்பாக்கியை பறிக்க முயன்றபோது பலியானார். ஒரு சிலர் சுற்றுலாவாசிகளை முதுகில் சுமந்து கொண்டு மலைப்பிரதேசத்தில் ஓடி, இறங்கி அவர்களை பாதுகாத்தனர். பலரும் பல வழிகளில் சுற்றுலாவாசிகளை காப்பாற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளன.
இதனை தொடர்ந்து, காஷ்மீரில் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை குறைய தொடங்கியது. பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன் விசாரணையில் பாகிஸ்தானின் பின்னணி இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், இதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அந்நாடு தொடர்ந்து மறுத்து வருகிறது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.