பஸ் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள் அருகில் குற்ற தடுப்பு ரோந்து படையினர் தீவிர கண்காணிப்பு

1 week ago 3

நாகர்கோவில் : குமரியில் பஸ் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள் அருகில் குற்ற தடுப்பு ரோந்து படையினர் கண்காணித்து வருகிறார்கள்.குமரி மாவட்டத்தில் குற்ற தடுப்பு நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் குற்ற தடுப்பு ரோந்து படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக, பெண் போலீசார் கொண்ட ரோந்து படையும், கஞ்சா, செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் வகையில் ஆண் போலீசார் கொண்ட குற்ற தடுப்பு ரோந்து படையும் அமைக்கப்பட்டுள்ளது.

பெண் போலீசார் 23 பைக்குகளிலும், ஆண் போலீசார் 20 பைக்குகளிலும் மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளை கண்காணிக்கும் வகையில் ஜீப் வசதியுடன் 8 சிறப்பு ரோந்து படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பைக் ரோந்து படையினர் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பஸ் நிலையங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த குற்ற தடுப்பு ரோந்து படையினர், பெண்கள், மாணவிகள் நிற்கும் பகுதியில் நீண்ட நேரம் நின்று கொண்டு இருந்த இளைஞர்களை விசாரித்து அப்புறப்படுத்தினர்.

காலை மற்றும் மாலை வேளைகளில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் மாணவர்கள் இடையே மோதல் போக்குகள் நீடித்து வரும் நிலையில், தற்போது குற்ற தடுப்பு ரோந்து படையினர் அந்த சமயங்களில் கண்காணித்து வருவதால் கடந்த இரு நாட்களாக மாலை வேளையில் பஸ் நிலையத்தில் மாணவர்கள் கூட்டம், கூட்டமாக நிற்பது குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறினர்.

நேற்று காலை அண்ணா பஸ் நிலையத்தில் பஸ்சில் இருந்து இறங்கி சென்ற மாணவிகள் சிலரை, இளைஞர்கள் 3 பேர் பின் தொடர்ந்தனர். போலீசார் பைக்கில் பஸ் நிலையத்துக்குள் வந்ததை பார்த்ததும், இளைஞர்கள் அங்கிருந்து நைசாக ஓட்டம் பிடித்தனர்.

பள்ளிகள், கல்லூரிகள் உள்ள சாலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு ரோந்து படையினர் கண்காணித்து வருகிறார்கள். பள்ளிகள் அருகில் கூட்டம், கூட்டமாக நின்றவர்களை அப்புறப்படுத்தினர். இதே போல் அடிக்கடி பிரச்சினை ஏற்படும் டாஸ்மாக் கடைகள், அதிக திருட்டுகள், செயின் பறிப்புகள் நடந்த பகுதிகளிலும் தற்போது குற்ற தடுப்பு ரோந்து படை கண்காணித்து வருகிறது.

The post பஸ் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள் அருகில் குற்ற தடுப்பு ரோந்து படையினர் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article