பவானியில் ரூ.1 கோடியில் போடப்பட்ட புதிய தார் சாலை; ஒரு வாரத்திற்குள் தோண்டப்பட்ட அவலம்

1 week ago 4

*பொதுமக்கள் அதிர்ச்சி

பவானி : பவானி நகராட்சி பகுதியில் ரூ.1.08 கோடியில் புதிதாக போடப்பட்ட தார் சாலை, ஒரே வாரத்தில் குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பவானி நகராட்சியில் 6வது மாநில நிதிக்குழு ஆணையம் 2023-2024 திட்டத்தின் கீழ் ரூ.1.08 கோடியில் தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. அம்ருத் 2.0 குடிநீர் விரிவாக்க பணிகள் நடைபெற்று வந்ததால் நிதி ஒதுக்கப்பட்டு ஒரு வருடமாகியும் சாலை பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், ஓரளவு பணிகள் முடிவடைந்ததால் தற்போது 1.30 கிமீ நீளம் மற்றும் 1.20 கிமீ நீளம் என இரு பிரிவுகளாக தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
வர்ணபுரத்தில் 2 வீதியை தவிர, பாக்கியுள்ள 4 வீதிகளிலும் தார் சாலை அமைக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது. 5, 4வது வீதிகளில் தார் சாலை பணிகள் நிறைவடைந்த நிலையில், 3 மற்றும் 1-வது வீதியில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 4-வது வீதியில் தார் சாலை போடப்பட்ட ஒரே வாரத்தில் குடிநீர் குழாய் பழுது பார்க்க குழி தோண்டி, சேதப்படுத்தப்பட்டுள்ளது. தெருக்களில் குழாய் இணைப்பு வழங்குதல், பழுதுபார்த்தல் பணிகளை முழுமையாக நிறைவு செய்த பின்னரே தார் சாலை அமைப்பது வழக்கம். சாலை போட்ட அடுத்த 5 வருடங்களுக்கு ரோடுகளின் குறுக்கே குழிகள் தோண்டக்கூடாது. ஆனால், விதிகளுக்கு புறம்பாக சாலை போட்டு, ஒரே வாரத்தில் குழி தோண்டப்பட்டது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளதோடு, இதுபோன்று எத்தனை இடங்களில் குழி தோண்டி சாலையை சேதப்படுத்துவார்களோ எனும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சொத்து வரி, வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் வரி என வீடுவீடாக சென்று நகராட்சி ஊழியர்கள் வரியினங்களை இரவு பகலாக வசூல் செய்து வருகின்றனர். ஆனால், வசூலிக்கப்படும் மக்களின் வரிப்பணம் அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணடிக்கப்படுவதும் தொடர்ந்து வருவது வேதனை அளிக்கிறது என்கின்றனர்.

The post பவானியில் ரூ.1 கோடியில் போடப்பட்ட புதிய தார் சாலை; ஒரு வாரத்திற்குள் தோண்டப்பட்ட அவலம் appeared first on Dinakaran.

Read Entire Article