‘‘தலைமைக்கு தனது செல்வாக்கை காட்டுவதற்காக செயல்வீர்கள் கூட்டத்தில் பவரை காட்டிய மாஜி அமைச்சர் பற்றி சொல்லுங்களேன்..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு இலை கட்சி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்திருக்கு.. கூட்டத்திற்கு, மாவட்ட மாஜி அமைச்சர் தலைமை வகித்தாராம்.. இதில், கொங்கு மண்டலத்தை சேர்ந்த மாஜி அமைச்சர்கள் 2 பேர் கலந்து இருக்காங்க… தலைமைக்கு தன்னுடைய பவர் என்ன என்பதை காண்பிக்க வேண்டிய கட்டாயத்தில் மாஜி அமைச்சர் தள்ளப்பட்டாராம்… இதற்காக தான், கொங்கு மண்டலத்தை சேர்ந்த 2 மாஜி அமைச்சர்களை தன்னுடைய மாவட்டத்துக்கு வரவழைத்தாராம்.. மேலும், இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் ‘விட்டமின் ப’ கொடுத்து அதிக அளவில் கூட்டத்தையும் மாஜி அமைச்சர் காட்டியிருக்கிறாரு.. மோசடி வழக்கில் சிக்கியதால் சமீபகாலகமாக, லோக்கல் மாஜி அமைச்சரை தலைமை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்ததாம்… இதனால் கடும் அப்செட்டில் இருந்து வந்த மாஜி அமைச்சர், தலைமையிடம் தனது செல்வாக்கை காட்டிக் கொள்வதற்காகவே அதிரடியாக இந்த கூட்டத்தை நடத்தி முடித்ததாக அவரது ஆதரவாளர்களுக்குள் பேசிக்கிட்டங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘முளைக்காத நெல்லு விஷயத்துல ஆய்வுக்கு போன ஆபிசர்ஸ்சும் சம்திங் பார்த்த கதை தெரியுமா…’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டத்துல செய் ஆறு பெயரைக்கொண்ட ஆற்றின் பக்கத்துல ஒரு கிராமம் இருக்குது.. இந்த கிராமத்துல இருக்குற ஒரு நிலத்துல நெல் விதைச்சிருக்காங்க.. விதைக்கப்பட்ட அந்த நெல்லுல ஒரு விதை கூட முளைக்கவே இல்லையாம்.. உயர் அதிகாரிங்க வெயிலூர் மாவட்டத்துல இருந்தும் கிரிவலம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் ஆய்வு செய்றதுக்கு செய் ஆறு ஏரியா கடைகளுக்கு விரைந்து ேபானங்களாம்.. போன இடத்துல பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ஆறுதல் கூறினாங்களாம்.. விவசாயிக்கு ஆறுதல் கூறிவிட்டு, அந்த முளைக்காத விதைய விற்பனை செய்த வியாபாரிகிட்ட இருந்து இழப்பீடு வாங்கிக்கொடுத்தாங்களாம்.. நல்ல விஷயம் தான். ஆனா? வாங்குனதுல ஆய்வுக்கு வந்த அதிகாரிகளும் சில ஆயிரங்களை எடுத்துக்கிட்டாங்களாம்.. ஆய்வுக்கு போன இடத்துல இழப்பீடு வாங்கிக்கொடுத்து, அதுல பங்கும் எடுத்துக்கிட்ட ஆபிசர்ஸ்சை பற்றித்தான் பரபரப்பு பேச்சு கிரிவலம் மாவட்டத்துல போய்கிட்டிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத கட்சி எம்எல்ஏவின் அடுத்த வாரிசு நகர்வு கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை கொதிப்படைய செய்துள்ளதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மஞ்சள் மாவட்டத்தில் பூ கட்சி எம்எல்ஏ தனது மருமகளுக்கு சீட் வாங்க காய்களை நகர்த்தி வருவதால், அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.. தொகுதியில் மக்கள் நலப்பணிகளை கவனம் செலுத்துவதற்கு பதிலாக திறப்பு விழாக்களில் கலந்துகொண்டு தனது இருப்பை பதிவு செய்து வரும் எம்எல்ஏ, தனக்கு பின்னால் தன்னுடைய மருமகளை எம்எல்ஏ ஆக்கி அழகு பார்க்கணும்ங்கிற ஆசை நீண்ட நாளாக இருக்கிறதாம்.. இதற்காக கட்சி மேலிடத்தில் உயர் பொறுப்பில் உள்ள நிர்வாகிகளை நேரில் சந்தித்து கச்சிதமாக காய்களை நகர்த்திகிட்டு வருகிறாராம்.. எலெக்சனுக்கு முன்னாடி தனது மருமகளை தொகுதி மக்களிடம் அறிமுகப்படுத்துவதற்காக ஒரு அறக்கட்டளை துவங்க வைத்து, அதன் மூலம் மருத்துவ முகாம்கள், ஆன்மிக சுற்றுலா அழைச்சிட்டு போவது போன்ற நடவடிக்கைகளில் தீவிரமா செய்துகிட்டு வருகிறாராம்.. எம்எல்ஏவின் அடுத்த வாரிசு நகர்வுகள் பூ கட்சிக்காரங்களை கொதிப்படைய செய்திருக்கிறதாம்.. வெளிநாடு சென்றுள்ள மவுண்டன் ரிட்டன் ஆனதும் பஞ்சாயத்து வைத்துக்கொள்ளலாம் என்று கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் முடிவு செய்திருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தீபாவளி இனாம் வராததால் முக்கிய நிர்வாகிகள் மீது இலைக்கட்சியினர் ெராம்பவே அதிருப்தியில் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்டத்தில் இலைக்கட்சியின் மாவட்ட மாஜி அமைச்சர், முக்கிய நிர்வாகிகள் மீது கட்சியினர் கடும் அதிருப்தியில் இருக்காங்களாம்.. இலைக்கட்சி தரப்பு ஆளுங்கட்சியாக இருந்தபோது, தீபாவளி காலங்களில் வட்ட பிரதிநிதி, வட்ட செயலாளர், மாவட்ட நிர்வாகி வரையில் ரூ.1000 துவங்கி ரூ.15 ஆயிரம் வரை இனாமாக கொடுக்கப்பட்டதாம்.. கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படாத நிலையில், தேர்தல் நெருங்கி வரவுள்ளதால், இந்த ஆண்டு தீபாவளிக்காவது இனிப்பான கவனிப்பு இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனராம்.. ஒரு கட்டத்தில் காத்திருக்க முடியாமல், முக்கிய மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கேட்டிருக்காங்க… இதற்கு மேலிடத்தில் இருந்து எதுவும் வரவில்லை. வந்தால் பார்க்கிறோம் என மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் இருந்து கூறப்பட்டதாம்.. கடைசி வரை காத்திருந்து, தீபாவளிக்கான இனாம் வராததால் கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்து இருக்காங்களாம்.. தீபாவளியை சிறப்பாக கொண்டாட முடியாததால் விரக்தியடைந்த கட்சியினர், ‘‘முக்கிய நிர்வாகிகளுக்கு எந்தெந்த வழிகளில் எல்லாம் வருமானம் வருகிறது என்பது எங்களுக்கு தெரியாதா? 10 ஆண்டு காலம் சம்பாரிச்சதுல கிள்ளிக் கொடுத்தால் போதுமே? எங்களுக்கும் காலம் வரும். அப்போ பார்த்துக் கொள்கிறோம். இனி கூட்டத்திற்கு ஆட்களை கூட்டி வரணும்னு சொல்லுவீங்கள்ல… அப்ப பார்த்துக்கிறோம்னு புலம்புகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பழைய கூட்டணிக்கே திரும்ப முடிவெடுத்து இருக்கிறதாமே மாங்கனி கட்சி..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘2026 சட்டமன்ற தேர்தலை நாடே உற்றுநோக்கும் நிலையில் அதற்கான வேலைகளை தமிழக கட்சிகள் தொடங்கியிருக்காங்களாம்.. அதில் சேலத்து கனி கட்சி பழைய கூட்டணிக்கே திரும்ப முடிவெடுத்துள்ளதாம்.. 30 சீட்டு பிளஸ் கரன்சியையும் பேசி முடித்திருக்காங்களாம்.. அதன்பிறகுதான் சூசகமாக டிவிட்டரில் பழமொழி கசிய விடப்பட்டதாம்.. நடப்பு கூட்டணியில் எம்பி தேர்தலில் ஒரு சீட்டுகூட ஜெயிக்க முடியல, டெபாசிட் வாங்க முடியல, தேர்தலின்போது கூறியதைபோல எந்த பதவியும் வழங்காமல் சாதாரண ஆலோசனை குழு உறுப்பினர் பதவி வழங்கியதால் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு மாஜி அணிக்கு தலைவரும் சம்மதித்து பேசி முடித்திருக்காங்களாம்.. அதில் 60 தொகுதி பட்டியலை சேலத்துக்காரரிடம் கொடுத்திருப்பதோடு தாங்கள் கேட்கும் 30 தொகுதியை கட்டாயம் கொடுத்தாக வேண்டுமென நிர்ப்பந்திக்க, அதை இலை கட்சியும் பச்சைக்கொடி காட்டி விட்டதாம்.. இதனால் படிப்படியாக பழைய கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கான வழியை சேலத்துகனி கட்சி தேடிக் கொண்டிருக்கிறதாம்.. வரும் டிசம்பர் மாதம் பொதுக்குழுவை கூட்டி கூட்டணி குறித்து அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறதாம்.. எம்பி தேர்தலில் கூட்டணிக்கு அட்வான்ஸ் பெய்டு வரை சென்று இலை கட்சிக்கு ஏமாற்றம் மிஞ்சியதால் வரும் சட்டமன்ற தேர்தலில் முன்கூட்டியே வலைவிரித்து கூட்டணியை இறுதி செய்து வருகிறாராம் சேலத்துக்காரர்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post பழைய கூட்டணிக்கு போக மாங்கனி பார்ட்டி தயாராகி வருவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.