
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த கீதா என்பவர் கோவில்பட்டியிலுள்ள மொபைல் கடையில் ரூ.3,055 மதிப்புள்ள செல்போன் ஒன்று வாங்கியுள்ளார். வாங்கிய ஒரு வாரத்திற்குள்ளாகவே மொபைல் வேலை செய்யாததால் கடைக்காரரிடம் சரி செய்ய கொடுத்துள்ளார். இது வெறும் சிறிய பிரச்சினைதான். உடனடியாக சரி செய்து தருகிறோம் என்று சொல்லி சரி செய்து கொடுத்து விட்டார்கள். ஆனால் மீண்டும் செல்போன் சரியாக வேலை செய்யாததால் அவர் கடைக்காரரை அணுகியுள்ளார். மீண்டும் அதே பிரச்சினை ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான கீதா தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீலபிரசாத், உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் மொபைல் கடையின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு பழுதான மொபைலின் விலையான ரூ.3,055 மற்றும் ரூ.30,000 நஷ்ட ஈடு மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5,000 ஆக மொத்தம் ரூ.38,055-ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.