பழவேற்காடு கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய மாணவனை தேடும் பணி தீவிரம்: கடந்த 18 நாளில் 8 பேர் பலியான சோகம்

2 weeks ago 2

பொன்னேரி, ஜன. 19: பழவேற்காடு கடல் பகுதியில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கிய பள்ளி மாணவனை தேடும் பணியில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் கடந்த 18 நாட்களில் ராட்சத அலையால் இழுத்துச் செல்லப்பட்டு இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில் கடலும், ஆரணியாறும் இணையும் முகத்துவார பகுதி உள்ளது. இக்கடல் பகுதியில் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சுற்றுலா வருபவர்கள் பலர் கடலில் குளிப்பது வழக்கம். சில நேரங்களில் எதிர்பாரதவிதமாக எழும் ராட்சத அலையில் சிக்கி சிலர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு, மூச்சுத்திணறி உயிரிழப்பதும் உண்டு. கடலில் மூழ்கி நீச்சலடித்து உயிர் பிழைத்தவர்களும் உண்டு.

இந்தநிலையில், சென்னை செங்குன்றம் அடுத்த, தீர்த்தங்கரையம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவரது மகன் திலக் பிரசன்னா (16) நேற்று பழவேற்காடு அடுத்த லைட்ஹவுஸ் கடற்கரையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். குளித்தபோது, எதிர்பாரதவிதமாக எழுந்த ராட்சத அலை ஒன்று குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திலக் பிரசன்னாவை கடலுக்குள் இழுத்துச்சென்றது. ராட்சத அலையில் இருந்து மீள சிறுவன் போராடினான்.

ஆனால் அடுத்தடுத்து வந்த ராட்சத அலைகள் சிறுவனை கண்ணிமைக்கும் நேரத்தில் கடலுக்குள் இழுத்துச் சென்றது. சிறுவனின் உடலை தீயணைப்புத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பாலைவனம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிறுவன் கடலில் தத்தளிக்கும் காட்சிகள் தற்போது சமுகவலைதளங்களில் பரவி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம், அப்பகுதி பொதுமக்களிடமும், சுற்றுலாப்பயணிகளிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புத்தாண்டு தொடங்கி நேற்று வரை கடந்த 18 நாட்களில் தடையை மீறி கடலுக்குள் குளித்த 8 பேர் ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற பண்டிகை நாட்களில் மீன்வளத்துறை, கடலோரத்துறை, தீயணைப்புத்துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித்துறை என அனைத்து துறை அதிகாரிகளும் அலட்சியத்துடன் செயல்படுவதால்தான் இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
எனவே,தமிழக அரசு பழவேற்காடு கடலில் குளிப்பதற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். ராட்சத அலையில் சிக்கி கடலில் இழுத்து செல்லப்பட்டு தத்தளிப்பவர்களை மீட்பதற்கும் தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

The post பழவேற்காடு கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய மாணவனை தேடும் பணி தீவிரம்: கடந்த 18 நாளில் 8 பேர் பலியான சோகம் appeared first on Dinakaran.

Read Entire Article