
பழனி:
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வருடத்துக்கான திருவிழா ஜூன் 3-ந் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
திருவிழா நடைபெறும் 10 நாட்களும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. சப்பரம், தந்தப்பல்லக்கு, தோளுக்கினியாள், தங்ககுதிரை, வெள்ளி யானை, காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளி மயில், தங்க மயில் உள்ளிட்ட வாகனங்களில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஜூன் மாதம் 8-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து வைகாசி விசாகத் தேரோட்டம், மறுநாள் 9-ந் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும். திருவிழா நடக்கும் 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், இன்னிசை, வீணை இசை, நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.