பழனியில் கடவுள் வேடமணிந்து கேரள பக்தர்கள் கிரிவலம்

8 hours ago 5

பழனி,

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி திகழ்கிறது. இங்கு தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கும் முருகப்பெருமானை தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தீர்த்தக்காவடி, பால் காவடி, மயில் காவடி என பல்வேறு வகை காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

குறிப்பாக ஆனி மாதத்தில் கேரள பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். அப்போது கோபுர காவடி எடுத்து முருகனை வழிபட்டு செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக பழனி முருகன் கோவிலுக்கு கேரள பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் குழுவை சேர்ந்த 400 பேர் நேற்று பழனிக்கு வந்தனர். அந்த குழுவை சேர்ந்த 3 பேர் கோபுர காவடி எடுத்தனர். இதேபோல் 10 பேர் கடவுள் வேடமணிந்தும் வந்திருந்தனர். விநாயகர், காளி, சிவன், நரசிம்மர், அனுமன் போன்ற கடவுளை போன்றும், நந்தி போன்றும் ராட்சத உருவ பொம்மையில் வேடமிட்டும் இருந்தனர். அதோடு உருவப்பொம்மையில் மின்விளக்குகளை ஒளிரவிட்டபடி கிரிவலம் சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து மற்ற பக்தர்களும் கிரிவலம் சென்றனர். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்ததோடு தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

கிரிவலம் முடிந்த பிறகு கேரள பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதுகுறித்து கேரள பக்தர்கள் கூறும்போது, "ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பழனிக்கு வந்து கோபுர காவடி எடுத்து வழிபடு செய்வோம். இந்த ஆண்டு கடவுள் வேடமணிந்து வந்து, முருகப்பெருமானை தரிசனம் செய்தோம்" என்றனர்.

Read Entire Article