கோவை: திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கோயிலை நிர்வகிப்பதற்காக 5 பேர் கொண்ட புதிய அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டு இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதையடுத்து கோயில் தலைமை அலுவலகத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி நேற்று தலைவரை ஒருமனதாக தேர்வு செய்தனர்.
அதன்படி திருக்கோயிலின் அறங்காவலர் குழு தலைவராக திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவருமான கே.எம்.சுப்பிரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் புதிய தலைவர் கே.எம்.சுப்பிரமணியம் முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.எம்.சுப்பிரமணியத்திற்கு திருப்பூர், கோவை உள்பட மேற்கு மண்டலத்தை சேர்ந்த தொழிலதிபர்களும், ஆன்மிக அமைப்பின் நிர்வாகிகள், கோயில் பணியாளர்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இவர் இதற்குமுன் இக்கோயிலின் அறங்காவலர் குழு உறுப்பினராக பதவி வகித்து திறம்பட செயல்பட்டு வந்த நிலையில் தற்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கே.எம்.சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறுகையில், ‘பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கோயில் வளாகத்தில் சுத்தம், சுகாதாரம் மேம்படுத்த முழு நடவடிக்கை எடுக்கப்படும். நெரிசல் இன்றி பக்தர்கள் வழிபடுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். அரசுடன் கலந்து பேசி திட்டங்கள், வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
The post பழனி தண்டாயுதபாணி கோயில் அறங்காவலர் குழு தலைவராக திருப்பூர் சுப்பிரமணியம் பதவியேற்பு appeared first on Dinakaran.