புதுடெல்லி: பழங்குடியினர் நலத்துறையைப் பிராமணர்கள், நாயுடுக்கள் போன்ற உயர் பிரிவினர் நிர்வகிக்க வேண்டும் என்று பாஜக-வைச் சேர்ந்த இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேசியுள்ளது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், நேற்று ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சரும், நடிகரும், திருச்சூர் எம்பியுமான சுரேஷ் கோபி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘பழங்குடியினர் நலத்துறையின் அமைச்சராக ஒரு பழங்குடியினர்தான் இருக்க வேண்டும் என்பது நம் நாட்டின் சாபம். இந்தத் துறையைப் பழங்குடியினர் அல்லாத பிராமணர், நாயுடு உள்ளிட்ட உயர் வகுப்பினர் நிர்வகிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவும், எதிர்பார்ப்பும்.
அப்போதுதான் அத்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழும். இதேபோல, உயர் பிரிவு துறையைப் பழங்குடியினர் நிர்வகிக்க வேண்டும். இப்படி ஒரு மாற்றம் நமது ஜனநாயக நாட்டில் நடக்க வேண்டும். எனக்குப் பழங்குடியினர் நலத்துறையை நிர்வகிக்க வேண்டும் என்பது ஆசை. இதுகுறித்து பிரதமர் மோடியுடனும் பேசினேன். ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை’ என்று பேசினார். அமைச்சர் சுரேஷ் கோபியின் கருத்து பழங்குடியினருக்கு எதிராக உள்ளது என நாடு முழுவதும் விமர்சனங்கள் எழுந்தன. இவரைப் பதவி விலகச் சொல்லிக் குரல்களும் எழுந்து வருகின்றன.
இதற்குத் தற்போது விளக்கமளித்துள்ள சுரேஷ் கோபி, ‘தற்போதுள்ள அமைப்பு மாற வேண்டும் என்றுதான் கூறினேன். ஆனால், அது திரிக்கப்பட்டுள்ளது. என்னுடைய பேச்சை வைத்து பட்ஜெட் மற்றும் அதன் அறிவிப்புகளை மறைக்கப் பார்க்கின்றனர். என்னுடைய பேச்சு உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அதை நான் திரும்பப்பெறுகிறேன்’ என்றார். இதுகுறித்து கேரள கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெனாய் விஸ்வம் அளித்த பேட்டியில், ‘ஒன்றிய அமைச்சரவையில் இருந்து சுரேஷ் கோபியை நீக்க வேண்டும். கூட்டாட்சி கொள்கைகளை சுரேஷ் கோபி அவமதித்துள்ளார். கேரளாவையும் அவமதித்துள்ளார். பழங்குடியினருக்கு எதிரான மற்றும் கேரளாவுக்கு எதிரான கருத்துகளை கூறிய அமைச்சரின் கருத்து குறித்து பாஜக தனது நிலைபாட்டை தெளிவுபடுத்த வேண்டும்’ என்றார்.
The post பழங்குடியினர் துறையை உயர் பிரிவினர் நிர்வகிக்க கூறிய பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி பதவி விலக வேணும்!: டெல்லி பிரசாரத்தில் சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.