பழங்காலத்தில் உள்ள கட்டிடங்கள், கோயில்கள் திராவிட கட்டிடக் கலையின் பெருமைகளை நமக்கு உணர்த்தும் கலைக்களஞ்சியம்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

1 week ago 3

சென்னை: தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையும், இந்தியக் கட்டிடங்கள் கூட்டமைப்பும் இணைந்து, இந்திய கட்டிடங்கள் கூட்டமைப்பின் 5வது செயற்குழுக் கூட்டம் மற்றும் ஒரு நாள் கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமை விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது: தமிழ்நாடு, திராவிடக் கட்டடக் கலை மாண்புகளைப் பறைசாற்றும் கருவூலம். நம்நாடு சுதந்திரம் அடைந்த பின் முன்னேற்றமடைந்துள்ள அதிநவீன தொழில் நுட்பங்களைப் பின்பற்றி அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி பிரம்மாண்டமான கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. ஆனால், எந்தவித நவீன எந்திர வசதிகளும் இல்லாத பழங்காலத்தில் கட்டப்பட்டுள்ள பல பிரம்மாண்டமான கட்டிடங்கள் நம் நாட்டிற்குப் பெருமைகள் சேர்க்கின்றன. தமிழ்நாட்டின் அரசு முத்திரையில் திருவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் இடம் பெற்றுள்ளது.

அது தமிழ்நாட்டுக் கட்டிடக் கலையின் சிறப்பை நமக்குக் காட்டுகிறது. குறைந்த செலவு, நிறைந்த தரம், கட்டிடத் தோற்றப் பொலிவு, நீண்டகாலப் பயன்பாடு, இவை எல்லாம் கட்டுமானத்தின் முக்கிய அம்சங்களாகக் கவனிக்கப்பட வேண்டியவை. இதைப் பொறியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார். பொதுப்பணித்துறை செயலாளர் ஜெயகாந்தன், பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் எஸ்.மணிவண்ணன், டெல்லி இந்திய கட்டடக் கூட்டமைப்பின் தலைவர் தேப்நாத் தலைமையில் நடைபெற்ற இச்செயற்குழுக் கூட்டத்தில், இந்திய கட்டிடக் கூட்டமைப்பின் நிறுவன பொறியாளர் ஓ.பி.கோயல், இந்திய கட்டிடக் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் இந்தர்ஜித் சித்து மற்றும் இந்திய கட்டிடக் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில கிளையின் தலைவர் பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பழங்காலத்தில் உள்ள கட்டிடங்கள், கோயில்கள் திராவிட கட்டிடக் கலையின் பெருமைகளை நமக்கு உணர்த்தும் கலைக்களஞ்சியம்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article