நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்பு பள்ளிக்குக் காலையில் புறப்படும் சிறுவர்கள் மாலையில் வீடு திரும்பி வரும் வரை பெற்றோர்களுக்கு எந்தவித பயமோ பதற்றமோ இருந்ததில்லை. மாலையில் வருவதற்கு கொஞ்சம் தாமதமானால் கூட ஏதாவது பள்ளியில் விழா நடக்கும் என்று பதற்றப்படாமல் இருப்பார்கள். இன்று ‘பை பை’ சொல்லி பள்ளிக்கு வேனில் அனுப்புவது தொடங்கி, மாலை அந்த வேனில் வந்து இறங்குவது வரை பாதுகாப்பு அம்சங்களை கவனிக்க வேண்டி இருக்கிறது.
மாணவர்களின் கல்வியைத் தாண்டி அவர்கள் பள்ளிக்குப் பத்திரமாக சென்று திரும்பி வருவது என்பது மிக முக்கியமானது. இந்த வகையில் ஒரு மாணவர் பள்ளிக்குச் சென்று பாதுகாப்பாகத் திரும்பி வருவதில் பெற்றோரின் பொறுப்புகள் என்ன? பள்ளிக்கூடத்தின் பொறுப்புகள் என்ன? என்பதைப் பாலபாடமாக சொல்வதே இந்தக் கட்டுரை. பெற்றோர்கள், ஆசிரியர்கள் மட்டுமில்லாமல் மாணவர்களும் கவனமாக ஆழ்ந்து புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இவை.
வாகனங்களின் நிலை அறிய வேண்டும்
குழந்தை பள்ளிக்குச் செல்லும் வாகனம் பழுது இல்லாமல் இருக்கிறதா? ஓட்டை உடைசல் இல்லாமல் இருக்கிறதா? என்பதைப் பள்ளி நிர்வாகம் கவனிக்க வேண்டும். பெற்றோர்களும் அவ்வப்போது பார்க்க வேண்டும். (சில ஆண்டுகளுக்கு முன் வாகனத்தில் இருந்த ஓட்டையில் இருந்து விழுந்து ஒரு சிறுமி இறந்து போனதை நாம் மறக்க முடியாது). பள்ளி வாகனம் ஓட்டும் ஓட்டுநர் மற்றும் அவருடைய உதவியாளர் குடிப்பழக்கம் இல்லாமல் இருக்கிறார்களா? என்பதைக் கவனிக்க வேண்டும். ஓட்டுநர்கள் உதவியாளர்கள் மூலமும் ஆபத்து நிகழ்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். மாணவர்கள் செல்லும் வாகனங்களில் குறிப்பாக ஆட்டோவில் அளவுக்கு அதிகமான மாணவர்கள் ஏற்றப்படுகிறார்களா? என்பதைப் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். ஆட்டோ செல்லும் வழியையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆட்டோவின் உரிமையாளர், ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரின் போன் நம்பர் முகவரி ஆகிய விவரங்களை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மாலையில் ஆட்டோ வருவதற்கு தாமதமானால் உடனடியாகப் பள்ளியைத் தொடர்புகொண்டு விவரம் கேட்டறிய வேண்டும். பள்ளியில் ஏதேனும் விழாக்கள், நிகழ்வுகள் நடந்தால் முன்கூட்டியே பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்து விட வேண்டும்.
அரசுப் பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்கள் வழியில் கவனமாக இருக்க வேண்டும். சில சிறுவர்கள் வழியில் பழம் தரும் மரங்களை பார்க்கும்போது மரத்தில் ஏறி பழம் பறிக்கிறார்கள். திடீரென்று மரத்திலிருந்து வழுக்கி விழுந்து விடுகிறார்கள். காயம் ஏற்பட்டாலோ, பாதிப்படைந்தாலோ உடன் வந்த நண்பர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் திட்டுவார்கள் என்ற பயத்தில் யாரிடமும் எதுவும் சொல்லாமல் மறைத்து விடுகிறார்கள். கிராமப்புறங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்த சம்பவங்களை எடுத்துக் கூறி வழியில் எங்கும் நிற்காமல் நேராக பள்ளிக்குச் சென்று வர மாணவர்களைப் பெற்றோர் அறிவுறுத்த வேண்டும்.
அதேபோல பள்ளிக்குச் செல்லும் வழியில் ஆறுகள், குளங்கள் இருந்தால் அதில் இறங்கி விளையாடும்போது நீச்சல் தெரியாமல் ஏற்படும் ஆபத்துகளைச் சமீப காலங்களில் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். மாணவர்கள் இது போன்ற விபரீத விளையாட்டுகளைத் தவிர்க்க வேண்டும்.
கழிவறை விபத்துகள்
பள்ளி வளாகத்தில் கழிவறைகள் இருந்தாலும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் கழிவறையை பயன்படுத்தும்போது தங்களுடைய சக வயது நண்பர்களை உடன் அழைத்துச் செல்வது அவசியம். சில சமயம் கழிவறைகளில் வழுக்கி விழுந்து விபத்துகள் ஏற்படுகிற வாய்ப்புகள் இருக்கின்றன. கழிவறைக்குள் செல்லும் மாணவர்கள் சில சமயம் தெரியாமல் உள் தாழ்ப்பாள் போட்டுவிட்டு வெளியே வர முடியாமல் தவிக்கிற நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெறுகின்றன. (தொடக்கப்பள்ளி மாணவர்கள் கழிவறை பயன்படுத்தும் போது தாழ்ப்பாள் போட வேண்டாம் என்று பல பள்ளிகள் அறிவுறுத்தியிருக்கின்றன என்றாலும்கூட எதிர்பாராமல் சில விபத்துகள் நடைபெறுகின்றன) எனவே, தனியாகச் செல்லும்போது முதலுதவிக்கு நண்பர்கள் இருப்பது அவசியம்.
மாணவர்கள் பொறுப்பாகும் சம்பவங்கள்
மாலை நேரம் நண்பர் வீட்டுக்கு படிக்கச் செல்வதாக சொல்லிவிட்டு சில மாணவர்கள் தியேட்டருக்குச் செல்கிறார்கள். உங்கள் பெற்றோர்கள் நீங்கள் உங்கள் நண்பரின் வீட்டிற்கு சென்றிருப்பதாக நம்பி இருப்பார்கள். ஆனால், நீங்கள் தியேட்டருக்குச் சென்றபோது ஒரு விபத்து நடக்கிறது, என்று வைத்துக் கொள்ளுங்கள். தியேட்டரில்தானே விபத்து நமக்கென்ன அலட்சியமாக இருந்து விடுவார்கள். பிறகு தேடி வரும்போதுதான் நீங்கள் தியேட்டருக்கு சென்றிருக்கும் உண்மை தெரிய வரும். இதனால் ஆபத்துக் காலங்களில் உங்களைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும்.
மிக முக்கியமாக மாணவிகள் உடன்படிக்கும் சக தோழிகள் வீட்டிற்கு செல்வதாகச் சொல்லிவிட்டு ஆண் நண்பர்களுடன் சென்றுவிடுகிறார்கள். உங்களை நம்பி இருக்கும் பெற்றோர்கள் ஏமாந்து போகிறார்கள். ஆண் நண்பர்களால் ஆபத்து ஏற்படும்போது அது மிகப்பெரிய விபத்தாக முடிகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் பெற்றோர்களிடம் உண்மையைச் சொல்வது மட்டுமே உங்களுக்குப் பாதுகாப்பாக அமையும். ஒருவேளை நண்பர்கள் வீட்டுக்கு செல்வதையோ தியேட்டருக்குச் செல்வதையோ பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை என்றால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
வெளியாட்களிடம் தின்பண்டம் வாங்க வேண்டாம்
சிறுவயதில் இருந்தே எச்சரிக்கப்படும் இன்னொரு விஷயம் வெளியாட்கள் தின்பண்டங்கள் கொடுத்தால் வாங்கக்கூடாது என்பதுதான். தற்போது தலைவர்களின் பிறந்தநாளின்போது உள்ளூர்ப் பிரமுகர்கள் பள்ளி வகுப்பறைக்கே நேரில் வந்து இனிப்புகள் வழங்குகிறார்கள். தலைமை ஆசிரியர் அனுமதியுடன் இதை ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் கூட பள்ளி நிர்வாகமே இதைத் தவிர்த்து விடுவது சிறந்தது. பள்ளி வளாகத்திற்கு வெளியே உள்ளூர் பிரமுகர்கள் உட்பட யார் கொடுக்கும் இனிப்புப் பண்டங்களையும் பெற்றோர்கள் அனுமதியுடன்தான் சாப்பிட வேண்டும்.
(சமீபத்தில் புதுச்சேரியில் உள்ள பள்ளி ஒன்றில் தன் மகளை விட அதே வகுப்பில் படிக்கும் இன்னொரு மாணவன் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறார் என்பதற்காக அந்த மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததும், அதை அருந்திய மாணவர் இறந்துபோனதும் ஞாபகம் இருக்கலாம் எச்சரிக்கை)
வளாகப் பாதுகாப்பு
பள்ளி வளாகத்தில் இருக்கும் பட்டுப்போன மரங்கள், மின்கம்பங்கள் போன்றவற்றை பெற்றோர்கள் பார்க்கும்போது அவற்றை அகற்றச் சொல்லி பள்ளி நிர்வாகத்திடம் முறையிட வேண்டும். மழைக்காலங்களில் மின்கசிவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படலாம் என்பதால், பள்ளி நிர்வாகம் மின் இணைப்புகளை அவ்வப்போது சோதித்து சரி செய்ய வேண்டும். இதைப் பள்ளி நிர்வாகத்திற்கு உணர்த்துவதும் பெற்றோரின் பாதுகாப்புக் கடமையாகும்.
விளையாட்டுச் சண்டைகள்
விளையாட்டின்போதும் விளையாட்டுப் போட்டிகளின்போதும் மாணவர்கள் உரிய பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். வேடிக்கை பார்க்கும் மாணவர்கள் உரிய இடைவெளிகளில் நிற்க வேண்டும். (உதாரணமாகக் குண்டு எறியும்போது குறுக்கே செல்லக் கூடாது).
பள்ளி மாணவர்கள் விளையாட்டுக்காகப் போடும் சண்டைகள் பிறகு பெரிதாகி பள்ளிக்கு வெளியே சண்டை போடும் நிகழ்வுகளும் அதனைத் தொடர்ந்து விரும்பத் தகாத சம்பவங்களும் நடந்துவருகின்றன. மாணவர்
களின் பாதுகாப்புக்கு இந்த விளையாட்டுச் சண்டை ஓர் அச்சுறுத்தலாக இருக்கிறது. மாணவப் பருவத்தில் சக மாணவர்களுடன் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும், என்பதைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் போதிக்க வேண்டும். அன்பும் அரவணைப்பும் தான் உச்சபட்ச பாதுகாப்பு.
(இன்னும் படிப்போம்)
The post பள்ளிப் பயணமும் பாதுகாப்பும்! appeared first on Dinakaran.