பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை குத்திக்கொலை: காதலித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபர் வெறிச்செயல்.! தஞ்சை அருகே பயங்கரம்

1 month ago 3

தஞ்சாவூர்: காதலித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்ததால் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை வயிறு மற்றும் கழுத்தில் சரமாரியாக கத்தியால் குத்தி வாலிபர் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. மீனவர். இவரது மனைவி ராணி. இவர்களது மூத்த மகள் ரமணி (24). எம்ஏ, பிஎட் பட்டதாரியான இவர், கடந்த ஜூன் மாதம் முதல் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டு வேலை பார்த்து வந்தார். அவர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்பாடம் எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளி துவங்கியதும் மற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்த வகுப்பறைக்கு சென்றனர்.

இதில் ஆசிரியை ரமணி மட்டும் ஓய்வு அறையில் இருந்துள்ளார். அப்போது ஓய்வு அறைக்குள் திடீரென புகுந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், கையில் வைத்திருந்த கத்தியால் ரமணியின் வயிற்றில் குத்தியதில் அவர் அலறியபடி விழுந்தார். அப்போதும் அந்த இளைஞர் விடாமல் கழுத்து பகுதியிலும் சரமாரியாக குத்தியுள்ளார். ஆசிரியையின் அலறல் சத்தம் கேட்டு, சகஆசிரியர்கள் பதறி அடித்து ஓய்வு அறைக்குள் ஓடி வந்தபோது அங்கு ஆசிரியை ரமணி ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். அருகில் கத்தியுடன் நின்ற அந்த இளைஞரை பிடிக்க முயன்ற போது அவர் கத்தியை காட்டி ஆசிரியர்களை மிரட்டியுள்ளார். பின்னர் மாணவர்களும் அங்கு ஓடி வந்து அந்த இளைஞரை மடக்கி பிடித்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த ரமணியை, சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே ரமணி பரிதாபமாக உயிரிழந்தார். ஆசிரியை இறந்ததை பார்த்து சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கதறி அழுதனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தஞ்சை சரக டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக், எஸ்பி ஆஷிஷ் ராவத் ஆகியோர் அந்த பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். சேதுபாவாசத்திரம் போலீசார், மாணவர்களிடம் இருந்து அந்த இளைஞரை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில், ஆசிரியை ரமணகதய கொன்றது மல்லிப்பட்டினம் அருகே சின்னமனையை சேர்ந்த மீனவர் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம் மகன் மதன் (30) என்பதும், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 வருடத்திற்கு முன் ஊர் திரும்பிய மதன், இங்கேயே தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிந்து மதனை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘மதனும், ஆசிரியை ரமணியும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ரமணியை திருமணம் செய்ய ஆசைப்பட்ட மதன், பெற்றோரிடம் தெரிவித்து பெண் பார்க்க சொல்லியுள்ளார். அதன்படி கடந்த 17ம்தேதி மதனின் பெற்றோர், ரமணி வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர்.

ஆனால் ரமணியின் பெற்றோர், மதனை திருமணம் செய்வதில் மகளுக்கு விருப்பமில்லை. இதனால் வேறு பெண்ணை பார்த்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளனர். இதையடுத்து ரமணியும், மதனுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். ரமணியுடன் பேசுவதற்காக மதன் தொடர்ந்து முயற்சி செய்தும் அவர் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் கடந்த 2நாட்களாக ரமணி மீது ஆத்திரத்தில் இருந்த மதன், அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி நேற்று பள்ளிக்கு மதன் சென்றுள்ளார். அங்கு ஆசிரியர்கள் ஓய்வு அறையில் ரமணி மட்டும் தனியாக இருந்ததை பார்த்து இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது வயிற்றில் குத்தியுள்ளார். உயிர் பிழைத்து கொள்ள கூடாது என்பதற்காக திரும்பவும் கழுத்து பகுதியில் குத்தியுள்ளார். இதில் அவர் இறந்துவிட்டார்’ என்றனர்.

ஆசிரியை குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ஆசிரியை ரமணி (24) கொலை செய்யப்பட்ட செய்தியைக்கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ள இச்சம்பவமானது மிகவும் மிருகத்தனமானது, இவ்வழக்கின் விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குற்றவாளிக்கு விரைவில் சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும். கிராமப்புறப் பகுதியில் கல்விப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ரமணி உயிரிழப்பு பள்ளிக் கல்வித் துறைக்கும், சக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். ரமணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, ரமணி குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியை உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி; பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை

தஞ்சாவூர் அருகே கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் வீட்டுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் நேற்று மாலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.  தொடர்ந்து கொலை நடந்த மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற அமைச்சர்கள், ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நடக்க கூடாத ஒரு சம்பவம் நடந்துள்ளது. வேதனைக்குரிய நாளாக இது அமைந்துள்ளது. இதில் கொடுக்கப்படுகின்ற தண்டனை என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கு மனித இனத்தை தாக்கக்கூடிய தண்டனையாக இருந்திட வேண்டும். இந்த சம்பவத்தால் வாரம் முழுவதும் பள்ளிக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டு உள்ளேன். திங்கட்கிழமை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் வழங்க சொல்லி உள்ளேன். ஆசிரியர்களின் பாதுகாப்பு சட்டம் ஏற்கனவே ஒன்று உள்ளது. அதை வலுப்படுத்துவதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

The post பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை குத்திக்கொலை: காதலித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபர் வெறிச்செயல்.! தஞ்சை அருகே பயங்கரம் appeared first on Dinakaran.

Read Entire Article