சென்னை: தமிழ்நாடு தொழில் நுட்பக்கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி., எஸ்.டி.பணியாளர் நலச்சங்க பொதுச்செயலாளர் டி.மகிமை தாஸ், மாநில தலைவர் மணிமொழி ஆகியோர் கூட்டாக இன்று வெளியிட்ட அறிக்கை: தீண்டாமை ஒழிப்புச்சட்டம் இந்திய அரசியலமைப்பின் 17வது பிரிவில் இடம் பெற்றுள்ளது, தீண்டாமையை ஒழிப்பதற்காக இந்திய நாடாளுமன்றம் 1955ம் ஆண்டு குடியியல் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் 1989ம் ஆண்டு ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் 2015ல் வன்கொடுமை திருத்த சட்டம் போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன.
இவைகளின்படி தீண்டாமையை எந்த வடிவத்திலும் நடைமுறைப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் ஆண்டுதோறும் அனைத்துத்துறை அரசு அலுவலகங்கள் பள்ளி, கல்லூரிகளில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்க பலமுறை அறிவுறுத்தியிருந்தாலும்கூட இன்றளவும் பல அலுவலகங்களில் தீண்டாமை உறுதிமொழி ஏற்பதையும் இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று கொண்டாடப்படும் தேசிய சட்ட தினத்தை தவிர்த்தே வருகின்றனர். தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம்,தீண்டாமை மனித தன்மையற்ற செயல் என்ற இவ்வாசகங்கள் பல ஆண்டுகளாக, தமிழ்நாட்டு பாட நூல் கழகத்தால், மாணாக்கருக்கு வழங்கப்படும் பாடபுத்தகங்களின் முதற்பக்கத்தில் அச்சிடப்பட்டு இருக்கும்.
தற்போது அவைகள் என்ன காரணத்தினாலோ அச்சிடப்படுவதில்லை. எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு பாடநூல் கழகம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் வழங்கும் அனைத்து பாடபுத்தகங்களிலும் தீண்டாமை ஒருபாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை மனிதத்தன்மையற்ற செயல் என்ற வாசகங்களை அனைத்து பாட புத்தகங்களில் மட்டுமல்லாது, தனியார் பள்ளி கல்லூரிகளில் பாட புத்தகங்களிலும் அச்சிடவும், தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி, தேசிய சட்ட தினம் போன்றவைகளை தவறாது கடைபிடிக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்
The post தீண்டாமை மனித தன்மையற்ற செயல் வாசகம் அனைத்து பாட புத்தகங்களில் அச்சிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.