பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டி நடைமுறைகள்

3 months ago 8

தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும், பள்ளிக்கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாகக் கலை பண்பாட்டுக் கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே கலைத் திருவிழாவின் நோக்கம் ஆகும். அந்த வகையில் தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித் துறையின் முன்னெடுப்பின்படி மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்பட்டுவருகிறது.

இதில் நடனம், இசை, ஓவியம், நாட்டுப்புறக் கலைகள், நவீன கலை வடிவங்கள் எனப் பலவற்றிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களின் தனித்திறன்களை வெளிப்படுத்திவருகிறார்கள். இந்த கலைத்திருவிழா ஏதாவது ஒரு மையக்கருத்துடன் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கலைத்திருவிழா 2024-25 போட்டிகளின் மையக்கருத்து ‘சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு’ என்பதாகும். இந்த மையக் கருத்தின் அடிப்படையிலேயே போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பள்ளி அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 30ஆம் தேதி வரை அரசுப் பள்ளிகளில் 1 – 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன.

கலைத்திருவிழாப் போட்டிகள் ஐந்து பிரிவுகளில் நடத்தப்பட்டன

பிரிவு 1 – 1 மற்றும் 2ஆம் வகுப்பு
பிரிவு 2- 3 முதல் 5ஆம் வகுப்பு வரை
பிரிவு 3- 6 முதல் 8ஆம் வகுப்பு வரை
பிரிவு 4- 9 மற்றும் 10ஆம் வகுப்பு வரை
பிரிவு 5- 11 மற்றும் 12ஆம் வகுப்பு வரை

சில வழிகாட்டுதல்கள்

*அனைத்துப் பள்ளிகளும் கலைத்திருவிழா போட்டிகளில் பெரும்பான்மையான மாணவர்களைப் பங்கு பெறச்செய்தல் வேண்டும்.

*போட்டிகளை நடத்துவதற்குப் பள்ளி அளவில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கலை ஆர்வலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அமைப்பு க் குழுவினை உருவாக்க வேண்டும்.

*பள்ளி அளவில் நடைபெறும் கலைத் திருவிழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், SMC உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகளின் முழு ஈடுபட்டையும் ஒத்துழைப்பையும் பெறுதல் மிகவும் முக்கியம்.

*பள்ளி அளவிலான போட்டிகளில் நடுவர்களாகப் பணிபுரிய வல்லுநர்களை கண்டறிந்து அமைப்புக் குழுவினரிடம் கலந்து ஆலோசித்து நடுவர் பட்டியலைத் தயார் செய்ய வேண்டும். அதற்கான முன் அனுமதியை வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து பள்ளித் தலைமை ஆசிரியர் பெற வேண்டும். இந்த பட்டியலில் இருந்துதான் நடுவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

*பள்ளி அளவிலான அனைத்துப் போட்டிகளும் மையக் கருத்தின் அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

*ஒருவர் எவையேனும் மூன்று தனிப் போட்டிகள் மற்றும் இரண்டு குழுப்போட்டிகளில் மட்டுமே பங்கு பெற முடியும்.

EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல்

*போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களின் விவரங்களைச் சேகரித்து பள்ளி அளவில் போட்டி வாரியாகப் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பாகவே EMIS -ல் பதிவு செய்ய வேண்டும்
*ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களைப் போட்டி வாரியாக EMIS -ல் பதிவு செய்ய வேண்டும்.
*பள்ளி அளவில் முதலிடத்தில் வெற்றி பெறும் தனிநபர்/ குழு மட்டுமே வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறத் தகுதி பெறுவர்.
*சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவர்களை (CWSN) பெரும்பான்மையான அளவில் போட்டிகளில் பங்கு பெறுவதைத் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
*சில வகை மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு (ID, ASD, CP) மட்டும் ஒருசில போட்டிகள் தனியாக நடைபெறும்.
*இந்தப் போட்டிகளைச் சார்ந்த பள்ளிக்கான சிறப்புப் பயிற்றுநர்களுடன் இணைந்து நடத்த வேண்டும்.
*அட்டவணையில் குறிப்பிடப்படாத குறைபாடு உள்ள மாணவர்களை ஊக்குவித்து மற்ற மாணவர்களுடன் இணைந்து அனைத்துப் போட்டிகளிலும் பங்குபெறச் செய்ய வேண்டும்.
*போட்டிகளில் பங்கேற்கும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் படைப்புகளின் புகைப்படம் மற்றும் காணொளி சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் EMIS -ல் கட்டாயமாகப் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

இவைகளே பள்ளிகளில் நடத்தப்படும் கலைத்திருவிழாவுக்கான நடைமுறைகளாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான கலைத்திருவிழாப் போட்டிகள் பள்ளி, வட்டாரம், மாவட்ட அளவில் நடத்தப்பட்டுவிட்டன. அடுத்து மாநில அளவிலான கலைத்திருவிழாவுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டி நடைமுறைகள் appeared first on Dinakaran.

Read Entire Article