சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது; தன்னுடைய 14 வயதில் மாணவர் மன்றம் தொடங்கி, பிறகு தி.மு.க. இளைஞர் அணியில் ஈடுபட்டு அந்த அமைப்பை வலிமையுள்ளதாக வளர்த்து, தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக, மாநகராட்சி மேயராக, துணை முதல்வராக தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், தி.மு. கழகத்தின் தலைவராகவும் கடந்த 58 ஆண்டுகளாக ஓய்வறியா உழைப்போடு தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அயராது உழைத்து வரும் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில், அவர் பல்லாண்டு காலம் வாழ்ந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வாழ்த்துகிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் அரசியல் பயிற்சி பெற்ற காரணத்தால் உரிமைக்கு குரல் கொடுப்போம், உறவுக்கு கை கொடுப்போம் என்பதில் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உறுதியாக இருக்கிறார். ஒருபக்கம் கொள்கைக்காகவும், ஒருபக்கம் ஆட்சிக்காகவும் நாள்தோறும் உரிமைக்குரல் எழுப்பி வருகிறார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் 85 சதவிகிதத்திற்கும் மேலாக நிறைவேற்றி சாதனை படைத்திருக்கிறார். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறார், வாக்குறுதியில் இல்லாத சில திட்டங்களையும் நிறைவேற்றியிருக்கிறார்.
நாள்தோறும் முதலமைச்சரின் செயல்பாடுகளில் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களில் காட்டி வருகிற அக்கறையின் மூலம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டின் இத்தகைய மகத்தான வளர்ச்சியை மக்களின் பேராதரவோடு செயல்படுத்தி வருவதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க., பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறது. அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து, தரைமட்டமாக்கி அரசியல் பேராண்மையோடு, கொள்கை உறுதியுடன் செயல்பட்டு வருகிற தமிழ்நாடு முதலமைச்சரின் பணி சிறக்கட்டும் என இப்பிறந்தநாளில் அவரை மனதார வாழ்த்துகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
The post தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செல்வப்பெருந்தகை பிறந்த நாள் வாழ்த்து! appeared first on Dinakaran.