
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் வேன் ஒன்று நேற்று காலை மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது.
கமுதி-பார்த்திபனூர் சாலையில் வேன் சென்றபோது, திடீரென மோட்டார் சைக்கிள் ஒன்று குறுக்கே வந்ததாக தெரிகிறது. அப்போது பள்ளி வேன் டிரைவர் உடனடியாக பிரேக்கை பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக சாலையோரம் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பள்ளி வாகனத்தில் இருந்த 12 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து காயமடைந்த குழந்தைகள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.