பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்த பாஜ நிர்வாகியை நிர்வாணமாக்கி சரமாரி அடி: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

4 hours ago 4


சிவகங்கை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜ நிர்வாகியை மாணவியின் உறவினர்கள் மதுரைக்கு வரவழைத்து நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள வடகரையைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (45). இவர், திருப்புவனம் கிழக்கு ஒன்றிய பாஜக செயலாளராக உள்ளார். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். ஊரில் டிராவல்ஸ் நடத்தி வரும் ராஜ்குமார், பள்ளிகளுக்கு மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்லும் டிரிப் அடித்து வந்துள்ளார். இவரது வேனில் பள்ளிக்கு சென்று வந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு ராஜ்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிந்த மாணவியின் உறவினர்கள் சிலர், ராஜ்குமாரை மதுரையில் உள்ள தங்களது வீட்டிற்கு நேற்று வரவழைத்தனர். அங்கு அவரை நிர்வாணமாக்கி சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். பின் ராஜ்குமாரின் செல்போனை பறித்து அவரை போட்டோ எடுத்து ‘நான் ஒரு பொம்பள பொறுக்கி, என்னிடமிருந்து உங்கள் பெண் குழந்தைகளை பாதுகாத்து கொள்ளுங்கள்’ என டைப் செய்து ராஜ்குமாரின் செல்போனில் உள்ள அனைத்து மொபைல் நம்பர்களுக்கும் அனுப்பிவிட்டு ஸ்விட்ச்ஆப் செய்துவிட்டனர். நேற்றிரவு வாட்ஸ் அப்பில் இந்த தகவல் வேகமாக பரவியது. இது குறித்து தகவலறிந்த பூவந்தி போலீசார், திருப்புவனம் வடகரை கிராமத்தில் உள்ள ராஜ்குமார் வீட்டிற்கு விசாரணைக்கு சென்றுள்ளனர். ஆனால் வீடு பூட்டி கிடந்துள்ளது.

ராஜ்குமாரின் மனைவி, மகன்கள் யாரும் இல்லை, செல்போன்கள் அனைத்தும் ஸ்விட்ச் ஆப்பில் உள்ளன. ராஜ்குமார் எங்கு உள்ளார் என்ற விபரமும் தெரியவில்லை. இதுசம்பந்தமாக இருதரப்பும் புகார் எதுவும் தராத நிலையில் தனிப்படை அமைத்து பூவந்தி போலீசார், மதுரையில் எந்த இடத்தில் வைத்து ராஜ்குமார் தாக்கப்பட்டார், உண்மையிலேயே பாலியல் தொந்தரவு பிரச்னையில் தாக்கப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்த பாஜ நிர்வாகியை நிர்வாணமாக்கி சரமாரி அடி: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Read Entire Article