சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாடியதால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் இன்று அதிகாலை திம்பம் மலைப்பாதை 6வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையில் சிறுத்தை ஒன்று ஹாயாக நடமாடியது. அப்போது அவ்வழியே காரில் சென்ற பயணிகள் சிறுத்தை நடமாட்டத்தை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். சிறிது நேரம் சாலையில் அங்கும் இங்கும் உலாவிய சிறுத்தை பின்னர் வனப்பகுதிக்குள் தாவிக் குதித்தோடி மறைந்தது. மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகனத்தில் செல்லும் பயணிகள் கீழே இறங்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
The post திம்பம் மலைப்பாதையில் நடமாடிய சிறுத்தை: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.