பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து வரும் 8ம் தேதி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு

2 hours ago 1

சென்னை: போச்சம்பள்ளி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து வரும் 8ம் தேதி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிகையில்; “கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து, அப்பள்ளியில் கல்வி பயின்று வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

அரசுப் பள்ளி மாணவிக்கு, தான் கல்வி பயிலும் பள்ளியிலேயே பாதுகாப்பு இல்லை என்பது, வேலியே பயிரை மேய்கின்ற செயல். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து, அப்பள்ளியில் கல்வி பயின்று வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள அவல நிலையைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டங்களின் சார்பில், 8.2.2025 – சனிக் கிழமை காலை 10 மணியளவில், ‘கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில்’ மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி தலைமையிலும்; கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான P. பாலகிருஷ்ணா ரெட்டி; கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் K. அசோக்குமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

மாணவிக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் மாநில துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள், இந்நாள் பிரதிநிதிகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்றங்களைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து வரும் 8ம் தேதி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article