பள்ளி மாணவர்களுக்கு விண்கற்களைத் தேடும் பயிற்சி!

1 week ago 4

சூரியக் குடும்பம் தோன்றியதிலிருந்தே அதன் முக்கிய அங்கமாகப் பல கோடிக் கணக்கிலான சிறு கோள்கள் இருந்து வருகின்றன. சூரியக் குடும்பத்தின் பல்வேறு இடங்களில் பரவிக்கிடக்கும் சிறு கோள்களானது, வெவ்வேறு வடிவங்கள், அளவுகள் மற்றும் பண்புகளை உடையவை ஆகும். உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் சிறு கோள்கள் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த, சிறு கோள்களை (விண் கற்கள்) ஆராய்ந்து வகைப்படுத்துவதன் மூலம் அவற்றின் மோதலால் பூமிக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முடியும். உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் இவ்வாறு விண்கற்களை வகைப்படுத்தும் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளன. சில மீட்டர்கள் முதல் சில நூறு கிலோ மீட்டர்கள் விட்டம் கொண்ட விண்கற்களைக் கண்டறிவது ஒரு சவாலான பணியாகும். இந்தப் பணியைத் தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் செய்துவருகின்றனர். இதற்கான வழிகாட்டுதலை ‘ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன்’மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு விண்கற்கள் தேடுதல் திட்டம் மூலமாகப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். இவ்வாறு விண்கற்களைக் கண்டறிவதற்கான பயிற்சி பெறுபவர்கள் சர்வதேச அளவிலான விண்கற்கள் தேடுதல் நிகழ்ச்சியில் தமிழகத்தின் சார்பாகப் பங்கேற்று வருகின்றனர்.

இத்தேடுதல் திட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு, International Astronomical Search Collaboration (IASC) எனும் சர்வதேச அமைப்பு, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து, ஹவாயில் உள்ள பான்-ஸ்டார்ஸ் (PAN-STARRS) எனும் 1.80மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கியால் எடுக்கப்படும் படங்களை ஆன்லைனில் வழங்கும். இப்படங்களை, விண்கற்களின் நகர்வுகளைக் கண்டறிய உதவும் பிரத்யேக மென்பொருளின் உதவியுடன், மாணவர்களும், ஆசிரியர்களும் ஆராய்வார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட படங்களில் ஏதேனும் நகரும் பொருட்கள் இருப்பின், அவற்றை வகைப்படுத்தி மீண்டும் பான்-ஸ்டார்ஸ் வானியலாளர்களுக்கு மாணவர்கள் அனுப்பிவைப்பர்.

மாணவர்களும், ஆசிரியர்களும் கண்டறியும் விண் கற்களின் தடயங்கள், மேலும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, சர்வதேச வானியல் மையத்துக்கு அனுப்பப்படும். இவ்வாறு பல நிலைகளைக் கடந்து உறுதி செய்யப்படும் கண்டுபிடிப்புகளுக்கு மாணவர்களே பெயர் வைக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு விண்கற்கள் தேடுதல் திட்டம் மூலம், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 100 மாணவர்கள் மற்றும் 20 ஆசிரியர்கள் என தமிழகம் முழுவதுமிருந்து 20 குழுக்களைப் பங்கேற்கச் செய்கின்றனர். இந்த நிகழ்ச்சியானது 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. 20222 ஆம் ஆண்டில் பங்கேற்ற குழுவினர் சுமார் 300-க்கும் அதிகமான விண்கற்களின் தடயங்களைக் கண்டறிந்தனர். அவற்றில் 98 தடயங்கள் விண்கற்களாக இருப்பதற்கான அதிகப்படியான சாத்தியக்கூறுகள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு அடுத்தகட்ட ஆய்வுக்கு விஞ்ஞானிகளால் உட்படுத்தப்பட்டது. அடுத்ததாக, விண்கற்கள் தேடுதல் திட்டம் 2024 ஜனவரி – பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், ஆசிரியர்கள் கூடுதல் விவரங்களை < https://openspacefoundation.in > என்ற இணையதளத்தின் மூலம் முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ப்ரீமெட்ரிக் கல்வி உதவித்தொகை

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. ப்ரீமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகைத் திட்டம் (வருமான வரம்பு ஏதுமின்றி), சுகாதாரமற்ற தொழில்புரிவோர்களின் குழந்தைகளுக்கான ப்ரீமெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டம் (சாதி மற்றும் வருமான வரம்பு ஏதுமின்றி) உள்ளிட்ட பல உதவித்தொகை திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.மேற்காணும் திட்டங்களில் பயனடைய விரும்பும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் ஆதார், சாதி சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவற்றைத் தயார்நிலையில் வைத்துக் கொண்டு கீழ்க்காணும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும்.

 சாதிச் சான்று மற்றும் வருமானச் சான்று ஆகியவை இணைய சான்றுகளாக இருத்தல் அவசியம். இணைய சான்றுகளைப் பெற அருகிலுள்ள மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
 இ-சேவை ஆதாரில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் சரியான விவரங்களை திருத்திக்கொள்ள வேண்டும்.
 மாணவரின் வங்கிக் கணக்கு எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க (seeding) வேண்டும்.
 ஆதாருடன் இணைக்கப்பட்ட (seeding) வங்கிக் கணக்கு எண் செயல்பாட்டில் (Active) இருக்க வேண்டும்.

 ஆதாருடன் வங்கிக் கணக்கு எண் இணைக்கப்பட்டிருகிறதா என்ற விவரத்தினை உறுதிப்படுத்த http://resident.uidai.gov.in/bank-mapper என்ற இணைய முகவரியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 ஆதாருடன் வங்கிக் கணக்கினை இணைக்காதவர்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளை அணுகி ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இவ்விவரங்களை மாணாக்கர்களுக்கு தெரிவித்து ஆவணங்களைத் தயார் நிலையில் வைத்திருக்கப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் உதவியோடு விண்ணப்பத்தை பதிவு செய்யுங்கள்.

The post பள்ளி மாணவர்களுக்கு விண்கற்களைத் தேடும் பயிற்சி! appeared first on Dinakaran.

Read Entire Article