சென்னை: பல்லாவரம் மேம்பாலம் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.64 லட்சம் செலவில் மூன்று வழித்தடமாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை 6 மாதங்களில் முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தம்பரம் – கிண்டி இடையிலான ஜிஎஸ்டி சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது. தாம்பரத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும், சென்னையில் இருந்து தாம்பரம், புறநகர் பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களுக்கும் செல்வதற்கு லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றன. இந்த சாலையில் உள்ள மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை, சானடோரியம் உள்ளிட்ட சந்திப்புகளில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க குரோம்பேட்டை, துரைப்பாக்கம் ரேடியல் சாலை – ஜிஎஸ்டி சாலை சந்திப்பு மற்றும் விமான நிலையம் முன்பாக மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதனால், போக்குவரத்து நெரிசல் சற்றே குறைந்தது. இருப்பினும், பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை – குன்றத்தூர் சாலை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுதவிர, பல்லாவரம் சந்தை நடைபெறும் நாளில் வாகன நெருக்கடி அதிகரித்து வருகிறது. எனவே இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டது. ஆனாலும் முழுமையான தீர்வுகாணப்படாத நிலையில், குன்றத்தூர் சாலை, பல்லாவரம் சந்தை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் ஜிஎஸ்டி சாலையில் 1.5 கிமீ தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. 2016ல் தொடங்கப்பட்டு இப்பணிகள் 2020ல் முடிந்து பாலம் திறக்கப்பட்டது.
பாலம் திறக்கப்பட்ட போது, பல்லாவரத்தில் இருந்து கிண்டி செல்லும் ஒரு வழிப்பாதையாக இருந்தது. இதனால், கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் இலகுவாக சென்று வந்தன. ஆனால், கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் வாகனங்கள் மீண்டும் பல்லாவரத்தில் நெரிசலில் சிக்கி தவித்தது. இதையடுத்து, பாலத்தை இருவழிப்பாதையாக மாற்ற உத்தரவிடப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் இரு மார்க்கமும் வாகனங்கள் செல்லும் வகையில் மாற்றப்பட்டது. ஆனால், தற்போது காலை மற்றும் மாலை நேரங்களில் மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, அந்த பாலத்துக்கு கீழ் உள்ள சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கிண்டியில் இருந்து செல்லும் வாகனங்கள் பல்லாவரம் புதிய பாலத்தின் கீழ் பகுதி சாலையில் செல்லும்போது நெரிசலில் சிக்குகின்றன. அதேபோல் திருநீர்மலை சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அங்குள்ள பாலத்தின் அணுகு சாலையில் சென்று, பல்லாவரம் புதிய சாலையின் கீழ் திரும்பி, மீண்டும் குரோம்பேட்டை நோக்கி செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இருசக்கர, 4 சக்கர வாகன ஓட்டிகள், அங்கு அமைத்துள்ள சாலை தடுப்புகளை கடந்து எதிர்திசையில் வந்து பாலத்தின் கீழேயே சாலையை கடக்கின்றனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் கடும் நெரிசலில் சிக்குகின்றன. இதை தவிர்க்கும் வகையில் பாலத்தின் மேல் செல்லும் வாகனங்களும் பாலத்தின் கீழ் இறங்க காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், பல்லாவரம் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையை, ரூ.64 லட்சம் செலவில் 500 மீட்டர் தூரத்திற்கு மூன்று வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை 6 மாதத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
The post பல்லாவரம் மேம்பாலம் அருகே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 3 வழித்தடமாக சாலை விரிவாக்கம்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.