சென்னை: பல்லாவரம் பகுதியில் விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்து 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தக் குடிநீரை ஆய்வு செய்ததில் அதில் இரண்டு வகையான பாக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்துள்ளதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை அடுத்த பல்லாவரம் பகுதியில் கடந்த 4-ம் தேதி கழிவு நீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், 5-ம் தேதி அந்த குடிநீரை குடித்த பலருக்கு வாந்தி, பேதி, மயக்கம் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள், தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழக அரசு சார்பில், அப்பகுதியில் விநியோகிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கிண்டி கிங் ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.