சென்னை : பல்கலை. துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் இடைக்கால தடை விதிப்பு சட்டவிரோதம் என்று தி.க. தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டத்திற்கு ஐகோர்ட் நேற்று இடைக்கால தடை விதித்தது. இது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் பி.வில்சன், “இந்த தீர்ப்பு செல்லுபடியாகாது. தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்” என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், இது குறித்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி, “தமிழ்நாடு அரசே துணைவேந்தர்களை நியமிக்கலாம் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கிய பிறகு, அதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது தவறானது, இது ஏற்புடையது அல்ல. இவ்வழக்கில் மைக்கை மியூட் செய்துவிட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது, சட்டவிரோதம்.
உச்சநீதிமன்றத்தைவிட உயர்நீதிமன்றம் பெரியது என்பது போல செயல்படுகின்றனர். துணைவேந்தர் நியமனம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு உள்நோக்கம் கொண்டது. இது திட்டமிட்ட அரசியல் சதி. அரசியல் ரீதியாக ஆர்.எஸ்.எஸ் தொடர்பு கொண்ட நீதிபதிகள்தான், இதற்கு தடை வழங்கியுள்ளார்கள். இந்த தடையாணையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் உள்ளது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
The post பல்கலை. துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் இடைக்கால தடை விதிப்பு சட்டவிரோதம் :கி. வீரமணி appeared first on Dinakaran.